Published : 06 Mar 2023 06:11 PM
Last Updated : 06 Mar 2023 06:11 PM

பொதுப் போக்குவரத்தை தனியார்மயமாக்கும் அரசின் முடிவு ஏற்கதக்கதல்ல: தினகரன்

டிடிவி தினகரன் | கோப்புப்படம்

சென்னை: "மக்களுக்கு குறைந்த செலவில் பொதுப் போக்குவரத்தை வழங்கும் கடமையில் இருந்து அரசு விலகி, தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கதக்கதல்ல. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இருதரப்பையும் பாதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அரசு பேருந்துகளை தனியார் மயமாக்க திமுக அரசு திட்டமிடுவதாக ஆளுங்கட்சி தொழிற்சங்கமே குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சரே கூறியிருப்பதன் மூலம் பேருந்து போக்குவரத்து, தனியார் மயமாக்கப்படும் என்பது உறுதியாக தெரிய வருகிறது.

மக்களுக்கு குறைந்த செலவில் பொதுப்போக்குவரத்தை வழங்கும் கடமையில் இருந்து அரசு விலகி, தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கதக்கதல்ல. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இருதரப்பையும் பாதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். போக்குவரத்துறையில் புரையோடியிருக்கும் முறைகேடுகளை களையெடுத்து லாபநோக்கில் போக்குவரத்துத் துறையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்க எந்த முடிவும் செய்யப்படவில்லை. உலக வங்கி அளித்துள்ள கருத்துரை தொடர்பாக ஆய்வு நடத்தவே டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆலோசகர் நியமனம் செய்யபட்டு அறிக்கை பெறப்படும்.

எந்த பதற்றமும் தேவை இல்லை. ஆலோசகர் அளிக்கும் அறிக்கையை ஆய்வு செய்துதான் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தான் எதிர்கால நடவடிக்கை இருக்கும். ஏற்கனவே இயங்கும் பேருந்துகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பேருந்துகளை இயக்கத்தான் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு கிடைக்கும் சலுகையில் எந்த பாதிபபும் இருக்காது” என்று கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x