Published : 06 Mar 2023 04:40 PM
Last Updated : 06 Mar 2023 04:40 PM
சென்னை: கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினாலே என்3என்2 இன்புளுயன்சா வைரஸ் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.5.23 கோடி செலவில் கட்டப்பட்ட பல்வேறு மருத்துவக் கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.6) நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,"செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் ரூ.5.23 கோடி செலவில் 16 மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. முதல்வரின் உத்தரவின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மிக விரைவில் இவை திறந்து வைக்கப்படும்.
இந்தியா முழுவதும் எச்2என்2 இன்புளுயன்சா வைரஸ் பரவி வருகிறது. இது 4 நாட்கள் வரை காய்ச்சல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஐசிஎம்ஆர் வெளியிட்ட வழிகாட்டுதலின்படி கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினாலே இந்த வைரஸ் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். மேலும், வரும் 10-ம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. அதில் சென்னையில் மட்டும் 200 இடங்களில் நடைபெறவுள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று அமைச்சர் கூறினார்.
இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) குறிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி செய்ய வேண்டியவை: கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் | கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் | கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் | இருமல், தும்மல் வரும்போது மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ள வேண்டும் | கைகளால் கண் மற்றும் மூக்கை தொடக் கூடாது.
செய்யக் கூடாதவை: மற்றவர்களுடன் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும் | பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது | மருத்துவர்கள் அனுமதி இல்லாமல் ஆன்டிபயாடிக் மருத்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment