Published : 06 Mar 2023 04:05 PM
Last Updated : 06 Mar 2023 04:05 PM
புதுச்சேரி: அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் புதுச்சேரியில் நாளை முதல் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து எஸ்.பி மாறன் கூறியுள்ளார்.
மாசி மகத் திருவிழாவையொட்டி புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. காலை 8 முதல் இரவு 8 வரை நகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து எஸ்பி மாறன் கூறியதாவது: "புதுச்சேரியில் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். அதற்கு முன்னோடியாக புதுச்சேரியில் போலீஸார் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. அரசு ஊழியர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணிகிறார்களா என சோதனை செய்ய உள்ளோம். ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். கடந்த ஆண்டு 13 ஆயிரத்து 292 ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாலை விபத்தில் பலர் உயிரிழப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கிழக்கு கடற்கரை சாலை, 100 அடி சாலை உட்பட முக்கிய சாலையோரத்தில் சுற்றுலா வாகனங்கள், லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தக்கூடாது. அரசு ஒதுக்கிய இடத்தில்தான் வாகனங்களை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்யப்படும். உப்பளம் சாலையில் பள்ளிகள் அதிகம் உள்ளது. இங்கு மீன் விற்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீன் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எஸ்பி மாறன் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT