Published : 06 Mar 2023 06:51 AM
Last Updated : 06 Mar 2023 06:51 AM
சென்னை: உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு. இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் ஸ்க்ரப் டைபஸ் என்ற வகை காய்ச்சல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. தலைவலி, இருமல், மூச்சு திணறல் போன்றவை இதன் அறிகுறிகள். ஓரியன்டியா சுட்சுகாமுஷி என்ற பாக்டீரியாவால் உண்டாகும் இந்நோய் உயிருக்கு ஆபத்தானதாகும். இத்தொற்று விலங்குகள் வழியாக மனிதர் களுக்கு பரவும் தன்மை கொண்டது.
இந்நோய்க்கான மருத்துவ சிகிச்சையை கண்டறிய, நாட்டில்உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் குழு சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.
அதன்படி, ஸ்க்ரப் டைபஸ் நோயால் பாதிக்கப்பட்ட 800 பேரிடம் 7 நாட்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில், நோயாளிகளுக்கு 5 நாட்களில் ஏற்படும் காய்ச்சல், 7 நாட்களுக்குள் ஏற்படும் சிக்கல்கள், 25-வது நாளில் ஏற்படும் உயிரிழப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்த நோய்க்கு ஒற்றை மருந்தைவிட மருந்துகளின் கலவையை பயன்படுத்துவதும், மருந்துகளை நரம்பு வழியாக செலுத்தி சிகிச்சை அளிப்பதும் மிகுந்த பயனளிக்கும் என்று ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மூலம் நோயாளிகளின் உடலில் பாக்டீரியாக்கள் வேகமாக அழிக்கப்பட்டு, விரைவில் அவர்கள் குணமடைவது தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சி குறித்து வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சிஎம்சி) தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் ஜார்ஜ் எம்.வர்கீஸ் கூறும்போது, “ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்ட கலவையை, இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கபயன்படுத்தும்போது நோயாளிகள் 7 நாட்களுக்குள் குணமடையலாம். கடுமையான ஸ்க்ரப் டைபஸ் நோய்க்கான சிகிச்சைக்கு நரம்பு வழியாக செலுத்தப்படும் கூட்டு சிகிச்சையே சரியானது என இந்த சோதனை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது.
எதிர்காலத்தில் ஸ்க்ரப் டைபஸால் பாதிப்பு ஏற்பட்டால் பல லட்சம் மக்களின் உயிர்களை இந்த சிகிச்சை முறைகள் காப்பாற்றும்” என்றார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT