Published : 21 Sep 2017 09:19 AM
Last Updated : 21 Sep 2017 09:19 AM

மணிக் கணக்கில் நிற்க வைத்து பணியாளர்களை வதைக்கும் வணிக நிறுவனங்கள்!

‘சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் தொடர்ச்சியாக பத்து மணி நேரத்துக்கும் மேலாக ஓய்வின்றி நிற்க வைக்கப்படுகிறார்கள். இதனால், அவர்கள் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கொண்டு வருகிறார்கள்..’ தி இந்து இங்கே.. இவர்கள்.. இப்படி! பகுதிக்கான அலைபேசி (044 42890013) எண்ணில் திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், இப்படியொரு தகவலைப் பதிவு செய்திருந்தார்.

வறுமைப்பட்ட பெண்கள்

மக்களின் நுகர்வுக் கலாச்சாரத்தை தங்களுக்கான அறுவடைக் களமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பெரும்பாலும் பெண்களையே பணியில் அமர்த்துகிறார்கள். அதிலும், வறுமைப்பட்ட பெண்கள் தான் பெரும்பாலும் இங்கு வேலைக்கு வருகிறார்கள்.

இதில் பெரும்பகுதி வணிக நிறுவனங்கள் சொற்பமான சம்பளத்துக்கே பெண்களை வேலைக்கு எடுக்கின்றன. இதில், பலவற்றில் 12 லிருந்து 13 மணி நேரம்வரை பணியாளர்களை நிற்கவைத்து வேலை வாங்குகிறார்கள். மதிய உணவு இடைவேளையைத் தவிர மற்ற நேரம் முழுவதும் இவர்கள் நின்றுகொண்டே தான் இருக்க வேண்டும். வறுமை காரணமாகவும், வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தாலும் இதையெல்லாம் எதிர்த்து பெண்கள் யாரும் கேள்வி எழுப்புவதில்லை. இதனால், உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வரும் இவர்கள், மிகுந்த மன அழுத்தத்துக்கும் ஆளாகி வருகிறார்கள். பல இடங்களில் ஆண் பணியாளர்களும் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

மனதுக்குள் அழுதாலும்..

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருச்சி வணிக நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவர், “நீண்ட நேரம் நின்றுகொண்டே இருப்பதால் கால், இடுப்பு மற்றும் முதுகு வலிகள் உண்டாகி அவதிப்படுகிறோம். இந்த வேதனைகளால் மனதுக்குள் அழுதாலும் வாடிக்கையாளர்கள் முன்பு சிரித்த முகம் காட்டி பணி செய்யப் பழகிவிட்டோம். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால், வீட்டுக்குச் சென்றதும் வீட்டில் இருப்பவர்கள் மீது எரிந்து விழுகிறோம். வீட்டில் இருப்பவர்களும் எங்களைப் புரிந்து கொள்ளாத போது மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்” என்றார்.

இவர்களுக்கான பணியிட பாதுகாப்பு குறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ஜெயந்தி ராணி, “வணிக நிறுவனங்களில் பணியாளர்களுக்கு காற்றோட்டமான ஓய்வறை, சுத்தமான கழிப்பிடம், அமருவதற்கு ஏற்ற இடம், சுகாதாரமான உணவுக் கூடங்கள் இவை எதுவுமே சரியாக இருப்பதில்லை. பணி செய்யும் இருபாலருக்கும் ஓய்வாக அமர இடமளிப்பதுடன், அவர்களை சுய சுயமரியாதையுடனும் நடத்த வேண்டும்.

விசாகா கமிட்டி இருக்க வேண்டும்

20 பெண்களுக்கு மேல் பணிபுரிந்தால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி அந்த நிறுவனத்தில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். இந்தக் கமிட்டியில் பெண் உறுப்பினர்கள் அதிகமாக இருக்க வேண்டும். கமிட்டியிடம் பெண் பணியாளர்கள் தங்களுக்கான பிரச்சினைகளை தெரிவித்து தீர்வு காணலாம். ஆனால், பெரும்பாலான நிறுவனங்களில் விசாகா கமிட்டி அமைக்கப்படுவதே இல்லை” என வருத்தப்பட்டார்.

இந்திய தொழிலாளர் மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பி.ஆர்.ஈஸ்வரன் நம்மிடம் பேசுகையில், “தொழிலாளர் சட்டத்தில் 8 மணி நேரம் வேலை, கூடுதல் நேரம் பணி புரிந்தால் கூடுதல் சம்பளம். பணியிட பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கிறது. ஆனால், பெரும் வணிக நிறுவனங்களே இதையெல்லாம் செயல்படுத்துவதில்லை. பெரும்பாலான இடங்களில் தொழிலாளர்களுக்கான பணிப்பதிவேடு வைத்திருப்பதில்லை. தொழிலாளர்களை ‘பயிற்சியாளர்கள்’ எனச்சொல்லி பணியமர்த்தி நூதன முறையில் மோசடி செய்கின்றனர். விடுமுறை நாட்களில் விடுப்பு எடுக்கக் கூடாது; மீறி எடுத்தால் சம்பளத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள். மொத்தத் தில், இதுபோன்ற நிறுவனங்களில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்” என்றார்.

அனைத்து சலுகைகளும் உண்டு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவிடமும் இது தொடர்பாக பேசினோம். அவர், “தொழிலாளர்களை தேவையில்லாமல், வேண்டுமென்றே யாரும் நிற்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதில்லை. நின்று கொண்டு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அவ்வப்போது தேனீர் குடிக்க, உணவு சாப்பிட, கழிப்பிடம் செல்ல என தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்கிறார்கள். இப்படி, சுமார் 2 மணி நேரம் ஒருவருக்கு ஓய்வு கிடைக்கிறது. இதுகுறித்து எங்களிடம் எவ்விதமான புகாரும் வரவில்லை. ஒருவேளை, யாரேனும் வேண்டுமென்றே தொழிலாளர்களை நிற்கச் சொல்லி துன்புறுத்துவதாக உணர்ந்தால் எங்களிடம் புகார் செய்யலாம். நாங்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டோம். உழைப்பவர்களுக்கு நின்றுகொண்டு பணி செய்வது பெரிய விஷயமாக தெரியாது; பாதிப்பும் வராது. உழைக்க சங்கடப்படும் நபர்களுக்குத்தான் இதெல்லாம் பெரிய விஷயமாக தெரியும்” என்றார்.

திருச்சி தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் பாலசுப்பிரமணியனிடம் பேசினோம். ”நீங்கள் சொல்வது உண்மைதான். நானே பல நிறுவனங்களில் இதுபோல் தொழிலாளர்கள் உட்காராமல் நின்றுக் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன். ஆனால், இதுதொடர்பாக யாரும்புகார் தராதபோது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது” என்றார் அவர்.

மருத்துவர் சொல்வது என்ன?

தொடர்ச்சியாக நீண்ட நேரம் நின்று கொண்டி ருந்தால் அது தொழிலாளர்களுக்கு எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும்? பிரபல மூளை, நரம்பியல் சிகிச்சை நிபுணர் எம்.ஏ.அலீமிடம் கேட்டோம். அவர் தந்த விளக்கம் அதிர்ச்சி ரகம்.

“நீண்ட நேரம் நின்றபடியே பணிபுரிவதால் பாதம், கால், இடுப்பு, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் வலி ஏற்படும். காலில் ரத்தக் குழாய்கள் பலவீன மடையும். ரத்தக் குழாய் தடித்து வெளியே தெரிய ஆரம்பிக்கும். கால் கருப்பு நிறமாக மாறும். அரிப்பு, எரிச்சல், காலில் வீக்கம் ஏற்படும். சிலருக்கு காலில் ‘வெரிகோசிஸ் அல்சர்’ என்ற ஆறாத புண்கள் ஏற்படும். காலில் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைந்து கால்களை அகற்றும் நிலைகூட ஏற்படலாம். சில சமயம், ரத்தக் குழாய்களில் ஏற்படும் ரத்தக்கட்டு நகர்ந்து நுரையீரலுக்குச் சென்று உயிரிழப்பையும் உண்டாக்கும்.

நீண்ட நேரம் நின்றுக் கொண்டிருப்பவர்களுக்கு நாளடைவில் எலும்புகள் வலுவிழந்து உறுதியற்று உடையவும் கூடும். ரத்தம் விரைவில் உறையும் நிலை உருவாகும். இவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படவும் வாய்ப் புள்ளது. இதுபோன்ற பாதிப்புகளால் மன அழுத்தம், மனப் பதற்றம், மன அமைதியின்மை உள்ளிட்ட பிரச்சினைகளும் உருவாகும்.

இப்படி பணி செய்பவர்கள் அவ்வப்போது உட்கார்ந்தும், நடைப் பயிற்சி செய்தும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் நீர்ச்சத்து நிறைந்த உணவு, பழங்களை உட்கொள்ள வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட் களை தவிர்க்க வேண்டும். இப்படிச் செய்தால் பாதிப்புகளை ஓரளவு தவிர்க்கலாம். கால்களில் வலி, அரிப்பு, நிறமாற்றம், ரத்தக்குழாய் தடிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும்”என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x