Published : 06 Mar 2023 06:32 AM
Last Updated : 06 Mar 2023 06:32 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ரூ.12,772 கோடி மதிப்பீட்டில் 800 மெகாவாட் கொண்ட இரு அனல்மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளை 2018-ல் தொடங்கியது. ஒப்பந்தம் எடுத்த பாரத் மிகு மின்நிலையம் (பெல்), எல் அண்ட் டி ஆகிய 2 நிறுவனங்கள் இம்மின்நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டன.
இத்திட்டத்துக்காக 767.83 ஏக்கர் விளை நிலங்களும், 229.59 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களும் கையகப்படுத்தும் பணி நடந்தது. இம்மின்நிலையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது.
அனல்மின் நிலையத்தை குளிரச் செய்யும் நீரை கடலுக்குள் விடும்போது கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை அளித்தது.
இத்திட்டத்தால் ராமநாதபுரம் மாவட்டம் தொழில் வளர்ச்சி அடையும். அனல் மின்நிலையம் தொடங்கப்பட்டால் 500 பேருக்கு நேரடியாகவும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ரூ. 250 கோடியும், பெருவணிக சமூக பொறுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.38 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மின்நிலையம், அதனைச் சுற்றிலும் 4 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்கும் திட்டமும் உள்ளது என மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், இத்திட்டத்துக்கு மீனவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. விவசாயிகளும் தங்களது விளை நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றம் வரை வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற மும், தேசிய பசுமை தீர்ப்பாயமும் அடுத்தடுத்து இடைக்காலத் தடை விதித்தன. ஆனால், அரசின் மேல்முறையீட்டால், இரு தடைகளும் விலக்கிக் கொள்ளப் பட்டன.
திமுக அரசு பொறுப்பேற்றதும், இத்திட்டம் பரிசீலனை செய்யப் படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இங்கு 30 சதவீத பணிகளுக்கு ரூ.2300 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளன. மேலும் ரூ.2,200 கோடி மின்வாரியத்தினரின் ஊதியமாகவும், ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களுக்கும் பல கோடி ரூபாய் ஊதியமாகவும் செலவிடப் பட்டுள்ளன.
இந்நிலையில் முதல்வரின் உயர்மட்ட ஆலோசனைக்குழுவின் பரிந்துரையில் உள்ளதாகவும், அக்குழுவினர் விரைவில் அறிக்கை சமர்ப்பித்ததும், முதல்வர்தான் இத்திட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளதாகவும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் பி.ஜெகதீசன் கூறுகையில், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள உப்பூர் அனல் மின்நிலையத்துக்கு முதல்வர் அனுமதி அளித்து பணிகளை தொடர்ந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மாவட்டம் தொழில் வளர்ச்சி அடையும், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் என்றார்.
தொழிற்சாலைகளே இல்லாத ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இதுபோன்ற பெரிய திட்டத்தைக் கொண்டு வந்தால் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைப்பதுடன், மாவட்டமும் பொருளாதார வளர்ச்சி பெறும். இதை முதல்வர் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT