Published : 19 Sep 2017 10:50 AM
Last Updated : 19 Sep 2017 10:50 AM
அ
ண்ணாவின் 109-வது பிறந்த தினம், பெரியாரின் 139-வது பிறந்த தினம் - இவ்விரண்டு தினங்களும் அண்மையில் நம்மைக் கடந்து போனது தெரியும். ஆனால், திராவிட இயக்கத்தின் இவ்விரண்டு முக்கிய ஆளுமைகளும் முதன் முதலில் சந்தித்துப் பேசியது திருப்பூர் மாநகரத்தில் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
திருப்பூர் ரயில் நிலையத்தைக் கடக்கும் யாரும் அங்கே, ஒரே பீடத்தில் தோழமையுடன் நிற்கும் பெரியார், அண்ணாவின் முழு உருவ வெண்கலச் சிலைகளைப் பார்க்காமல் நகரமுடியாது. 2008-ல், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட சிலைகள் இவை. மாநகராட்சியில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்து, இந்த சிலைகளை நிறுவ மெனக்கெட்டவர் அப்போதைய திருப்பூர் மேயர் (தற்போதைய திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்) க.செல்வராஜ்.
25 வயது இளைஞர்
அதெல்லாம் சரி, எங்குமில்லாத வகையில் இங்கு மட்டும் ஏன் பெரியாரையும் அண்ணாவையும் இப்படி ஒரே பீடத்தில் நிற்க வைத்தார்கள்? இதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. 1934-ம் ஆண்டு மே 20-ம் தேதி, கோவை ஜில்லா செங்குந்தர் மகாஜன சங்க மாநாட்டுக் கூட்டம் திருப்பூரில் நடந்தது. பழைய ரேடியோ மைதானத்தில் (தற்போதைய டவுன்ஹால் உள்ள பகுதி) நடந்த அந்தக் நிகழ்வில், நீளமான கருப்புத் துண்டும் வெண் தாடியுமாய் கைத்தடி சகிதம் அமர்ந்திருக்கிறார் பெரியார். வெள்ளை ஜிப்பாவும், நான்கு முழ வேட்டியும் அணிந்த 25 வயது இளைஞர் ஒருவர் அதே மேடையின் முன் வரிசையில் வலது கோடியில் அமர்ந்திருக்கிறார். அவர்தான் காஞ்சி கண்டெடுத்த சி.என்.அண்ணாதுரை.
இந்த நிகழ்ச்சிக்கு சில வாரங்கள் முன்னதாக காங்கயத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதிலும் பெரியாரும் அண்ணாவும் ஒரே மேடையில் பங்கேற்றுப் பேசினார்கள். அப்போதே அண்ணாவின் கம்பீரமான அடுக்குமொழிப் பேச்சைக் கேட்டு பிரம்மித்துப் போனார் பெரியார். அந்தக் கூட்டத்தில் பேசிவிட்டு அண்ணா அங்கிருந்து பேருந்தில் கிளம்பிவிட்டார். அதனால், அண்ணாவும் பெரியாரும் அன்று நேரில் சந்தித்துப் பேசிக்கொள்ள வாய்ப்பு அமையவில்லை. அதன்பிறகு தான், திருப்பூர் செங்குந்தர் மாநாடு.
அழைத்துப் பேசிய பெரியார்
இருபெரும் தலைவர்களை முதல் முறையாக கைகுலுக்க வைத்த இந்த மாநாடு குறித்து நம்மிடம் பேசினார் திராவிடர் பாசறை மாத இதழின் ஆசிரியர் திராவிடமணி. “காங்கயத்தில் அண்ணாவின் பேச்சைக் கேட்ட பெரியார், தனது உதவியாளர் சங்கரய்யாவை அழைத்து, ‘யார் இந்த இளைஞர்?’ என விசாரித்திருக்கிறார். இந்த நிலையில், அடுத்த சிலவாரங்களில் நடைபெற்ற திருப்பூர் செங்குந்தர் மகாஜன சங்க மாநாட்டில் இருவரும் பங்கேற்றனர். அப்போதும் அண்ணாவின் பேச்சில் மயங்கிய பெரியார், கூட்டம் முடிந்ததும் அண்ணாவை தனியே அழைத்துப் பேசினார்.
அப்போது, ‘உங்க பேச்சு ரொம்ப நல்லா இருந்தது. நாங்க கரடுமுரடா சொல்றதை நீங்க, கண்ணியமா வண்ணமாச் சொன்னீங்க. என்ன படிச்சிருக்கீங்க?’ என்று அண்ணாவிடம் கேட்டார் பெரியார். அதற்குப் பதிலளித்த அண்ணா, ‘பி.ஏ., ஹானர்ஸ் பரீட்சை எழுதியி ருக்கேன். அரசியலில் ஈடுபடலாம்னு இருக்கேன்’ என்றார். அதற்கு பெரியார், ‘ஆமா அது தான் நல்லது. படிச்சுட்டு இப்படிப் பேசுறவங்க வேலைவெட்டினு போயிட்டா, படிப்புக்குப் படிப்பும் போச்சு, பேச்சுக்குப் பேச்சும் போச்சு. சீக்கிரம் ஈரோட்டுக்கு வாங்க’ என்றார் நட்போடு. அதன்பிறகு இருவரும் சேர்ந்து திராவிட காவியம் படைத்ததுதான் ஊருக்கே தெரியுமே!” என்றார் திராவிடமணி.
அறிவாலய கருவூலத்தில்..
திருப்பூர் செங்குந்தர் மாநாட்டில் பெரியாரும் அண்ணாவும் ஒரே மேடையில் அமர்ந்திருந்த போது எடுக்கப்பட்ட நிழல்படம் அண்ணா அறிவாலய கருவூலத்தில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாகப் பாதுகாக்கப்படுகிறது. இதேபோல், திருப்பூர் பகுதியிலுள்ள திராவிட இயக்கத் தோழர்கள் பலரது இல்லங்களிலும் இந்தப் படத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து பூரிப்புடன் பேசிய திருப்பூரின் முன்னாள் மேயர் செல்வராஜ், “பெரியாரும் அண்ணாவும் முதல் முறையாக சந்தித்த களம் அமைந்ததன் மூலம் வேறு எந்த ஊருக்கும் கிடைக்காத பெருமையை இருவரும் எங்கள் திருப்பூருக்குத் தந்துவிட்டனர். அதைப் போற் றும் விதமாகவே ஒன்பது லட்ச ரூபாய் செலவில் இருவருக்கும் ஒரே பீடத்தில் ஆள் உயர வெண்கலச் சிலையை வைத்தோம். இந்தத் தகவலைச் சொன்னபோது எங்கள் தலைவர் கருணாநிதி மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
பாராட்டினார்கள்
திருவண்ணாமலையைச் சேர்ந்த சிற்பி ராகவானந்தம் வடித்துத் தந்த இந்த சிலைகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அன்பழகன், திராவிடர் கழக தலைவர் வீரமணி, சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட அனைவரும் எங்கள் ஊருக்குக் கிடைத்திருக்கும் பெருமையையும், இரண்டு தலைவர்களுக்கும் ஒரே பீடத்தில் சிலை அமைக்கப்பட்டதையும் மகிழ்ந்து பாராட்டினார்கள்” என்றார்.
அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. உதயமான 69-வது ஆண்டு - என முப்பெரும் விழா கொண்டாட்டத்துக்காக புதுப் பொலிவு பெற்று தங்கமென தகதகத்துக் கொண்டிருக்கிறார்கள் திருப்பூரில் சிலையாய் நிற்கும் பெரியாரும் அண்ணாவும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT