Published : 05 Mar 2023 04:28 AM
Last Updated : 05 Mar 2023 04:28 AM

வலைதளங்களில் தவறான செய்தி பரப்பிய 5 பேர் மீது வழக்கு பதிவு - வதந்தி பரப்பினால் 7 ஆண்டு சிறை என டிஜிபி எச்சரிக்கை

சென்னை: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான செய்திபரப்பிய 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்து டிஜிபி சைலேந்திர பாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக தவறான செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

வதந்தி பரப்பியது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ‘தைனிக் பாஸ்கர்’ பத்திரிகையின் ஆசிரியர், திருப்பூர் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் ‘தன்வீர் போஸ்ட்’ என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர், தூத்துக்குடி மாவட்டம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் பிரசாந்த் உமாராவ், கிருஷ்ணகிரி மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சுபம் சுக்லா ஆகிய4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள 4 பேரையும்கைது செய்ய தனிப்படைஅமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் முழு பாதுகாப்புடன் அமைதியாக வசிக்கின்றனர். அமைதியை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பொய்செய்தி பரப்புவோர் பற்றியவிவரங்கள் காவல் துறையால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும். வதந்தி பரப்பி கைது நடவடிக்கைக்கு உள்ளாகும் நபர்களுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ட்விட்டரில் இரு தரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இந்தியில் பதிவிட்ட யுவராஜ் சிங் ராஜ்புத் என்ற ட்விட்டர் ஐ.டி. கொண்ட நபர்மீது கோவை மாநகர சைபர்கிரைம் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் இருந்து தனிப்படை போலீஸார் டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று,காவல் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து, தமிழகத்தில் பரவிய வீடியோக்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். இதை பரப்பியவர்களை பிடிக்கஅம்மாநில காவல் துறை உதவியை அவர்கள் நாட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x