Published : 05 Mar 2023 06:42 AM
Last Updated : 05 Mar 2023 06:42 AM

பொய்யான வீடியோ பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை - அண்ணாமலை, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வதந்திக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் தொழில், சேவைத்துறை மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளில், வட இந்திய தொழிலாளர்கள் பங்காற்றி வருவதை உணர்ந்து இருக்கிறோம். வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும், வெறுப்பு பிரச்சாரத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. இதுபோன்ற பொய் செய்திகளைப் பரப்புவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக இத்தனை ஆண்டுகளாக, வட மாநில மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செய்து வரும் வெறுப்பு பிரச்சாரத்தின் காரணமாக, தற்போது பரவி வரும் போலியான காணொளிகளைக் கூட உண்மையாக இருக்குமோ என்று எண்ணும் அளவுக்கு வட மாநிலங்களில் வசிக்கும் சகோதரர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த அச்சத்தை போக்குவது திமுகவின் பொறுப்பு.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழகத்தில் அமைதியை சீர்குலைப்பதற்காக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற 4 வீடியோக்கள் போலியாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதை காவல்துறை கைப்பற்றியிருக்கிறது. இத்தகைய வதந்தி பரப்பியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வடமாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளதை வரவேற்கிறேன்.

இந்திய அரசமைப்பின் பிரிவு 19-ன் படி இந்திய நிலப்பகுதி எங்கும் சுதந்திரமாக நடமாட, குடியிருக்க தொழில் செய்ய வேலை பெறுவது அடிப்படை உரிமையாக கூறப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை சீர்குலைக்கிற எவராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: வடமாநில தொழிலாளர்மீது தாக்குதல் நடைபெறுவதாகவதந்தி பரவி அவர்களிடையேமிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற வதந்திகளை பரப்பியவர்களைக் கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: வெளிமாநில தொழிலாளர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருப்பது, அவர்களை தமிழக அரசு வரைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. இவ்விவகாரத்தில் தமிழகஇளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில், வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x