Published : 07 Sep 2017 03:45 PM
Last Updated : 07 Sep 2017 03:45 PM
1 ஆண்டு; 900 அடி ஆழம்: 100 ஆழ்குழாய் கிணறுகள்- வெள்ளியங்காடு ஓடைக்கரையில் அதிர வைக்கும் விவசாயிகள் என்ற தலைப்பிலான 26.08.2017 தேதியிட்ட 'தி இந்து' தமிழ் இணையதளத்தில் செய்திக் கட்டுரை வெளியானது.
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியங்காடு கிராமத்தில் பாறைப் பள்ளத்தில் தண்ணீர் விடாமல் இருப்பதால் கடந்த ஓர் ஆண்டில் 500 அடி முதல் 900 அடி ஆழத்தில் நூறுக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் அங்குள்ள விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர்.
பில்லூர் அணையிலிருந்து வரும் பவானி தண்ணீர் இங்கே உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்தப்படுத்தப்பட்டே கோவை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளுக்கு குடிநீராக விநியோகிக்கப்படுகிறது. இப்படி சுத்திகரிக்கப்படும் நீரில் வெளியாகும் கழிவு மற்றும் உபரி நீர் பக்கத்தில் உள்ள குட்டைகளில் தேக்கப்பட்டு அங்கிருந்து செல்லும் பாறைப்பள்ளம் என்ற ஓடை வழியே 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெல்லித்துறை தேக்கம்பட்டி பகுதியில் பவானி ஆற்றில் சேருகிறது. இந்த தண்ணீர் செல்லும் வழியில் வெள்ளியங்காடு, முத்துக்கல்லூர், பாறைப்பள்ளம், பனைப்பாளையம் புதூர், சாலவேம்பு, தேவனாபுரம், விவேகாநந்தபுரம், நஞ்சே கவுண்டன்புதூர், தேக்கம்பட்டி உள்ளிட்ட கிராமத்து விவசாயம் செழித்து வந்தது.
இப்படியிருக்க கடந்த சில வருடங்களாக வெள்ளியங்காடு சுத்திகரிப்பு நிலையம் அருகிலேயே ஆயில் இன்ஜின்கள், சோலார் மின்சார மோட்டார்கள் நூற்றுக்கணக்கில் பயன்படுத்தி குழாய்கள் வழியே 3 முதல் 5 கிலோமீட்டர் தூரம் வரை தண்ணீர் முறைகேடாக தண்ணீர் எடுத்து செல்கிறார்கள் பலர். அதில் விவசாயிகள் மட்டுமல்லாது, மினரல் வாட்டர் கம்பெனிக்காரர்களும் உள்ளனர்.
இதனால் குட்டையிலிருந்து அரைகிலோமீட்டருக்கு மேல் தண்ணீர் ஓடைக்கு செல்வதில்லை. சுருக்கமாகச் சொன்னால் நெல்லித்துறை வரையுள்ள 9 கிலோமீட்டர் தூர ஓடையும் வறண்டு, மழை பெய்தால் மட்டும் தண்ணீர் வரும் நிலை உள்ளது. இதனால் நிலத்தடி நீர் இந்த ஓடையை ஒட்டியே அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.
ஆட்சியர் விவசாய குறைகேட்பு கூட்டத்தில் பலமுறை இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து சில மாதங்களுக்கு முன்பும் 'தி இந்து'வில் செய்தி வெளியானது. பெயரளவுக்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் சில பம்ப் செட்டுகளை அப்புறப்படுத்தினர். சில நாட்கள் மட்டுமே இதுவும் நடந்தது. ஆனால் தண்ணீர் உறிஞ்சுபவர்கள் மறுபடியும் மோட்டார் வைத்து தண்ணீர் கொண்டு போக ஆரம்பித்தனர்.
இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இந்த ஓடையோரம் உள்ள விவசாயிகள் தங்கள் கிணறுகள் சுத்தமாக தண்ணீர் வற்றிய நிலையில் ஆழ்குழாய்கிணறுகள் போட ஆரம்பித்து விட்டார்கள். அதன்படி இந்த ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட் ஆழ்குழாய் கிணறுகள் இந்த ஓடையின் ஓரங்களில் மட்டும் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள். இந்த நிலையில் தற்போது அதிகாரிகள் தலையிட்டு இப்படி தண்ணீர் உறிஞ்சும் முறைகேட்டாளர்களை எச்சரித்து தண்ணீர் எடுப்பதை தடை செய்துள்ளனர். அதனால் கடந்த ஒரு வாரகாலமாக தண்ணீர் பாறைப் பள்ளத்திற்கு வந்து தேக்கம்பட்டி வரை செல்வதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
இதுகுறித்து பாறைப்பள்ளம் விவசாயி மூர்த்தி 'தி இந்து'விடம் கூறும்போது, ''இந்த பாறைப்பள்ளம் தண்ணீர் கண்டு ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. அந்த அளவு வறண்டு கிடந்தது. இப்போது தாசில்தார் வந்து நடவடிக்கை எடுத்த பின்னாடிதான் ஒரு வார காலமாக தண்ணீர் செல்கிறது. இதனால் தற்போது இங்குள்ளவர்கள் ஆழ்குழாய் கிணற்று நீரை பயன்படுத்த தேவையில்லா நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் வெள்ளியங்காடு சுத்திகரிப்பு நிலைய குட்டை அருகே நீரை மறித்து வேறு திசையில் கொண்டு போயிருக்கும் விவசாயிகளிடம் இணக்கமாக பேச்சுவார்த்தை நடத்தியே இதை அதிகாரிகள் தற்காலிகமாக செய்திருப்பதாக தெரிகிறது.
அவர்களும் தற்போது மழை பெய்துள்ளதாலும், பள்ளங்கள், குட்டைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த தண்ணீரை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படியில்லாமல் பாறைப்பள்ளத்தில் தண்ணீர் செல்வதை நிரந்தரமாக்கி அதிகாரிகள் முழுமையாக்கி செயல்படுத்த வேண்டும்!'' என கேட்டுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT