Published : 05 Sep 2017 11:32 AM
Last Updated : 05 Sep 2017 11:32 AM
உப்பள மாவட்டத்தில் (தூத்துக்குடி) கல்விச் சேவை புரிய வஉசி பெயரில் கடந்த 1951-ல் கலைக் கல்லூரி தொடங்கிய காங்கிரஸ் பிரமுகர் ஏபிசி. வீரபாகு, அக்கல்லூரிக்கு தகுதியான முதல்வரை தேடினார். அப்போது, நெல்லை இந்து கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் அ. சீனிவாசராகவனே, அப்பொறுப்பை ஏற்க சரியான நபர். அவரை முதல்வராக நியமிக்குமாறு வீரபாகுவுக்கு கடிதம் எழுதினார் மூதறிஞர் ராஜாஜி. இவரால் அடையாளம் காணப்பட்ட முன்னோடி ஆசிரியர் சீனிவாசராகவனின் கல்விச் சேவை பற்றி ஆசிரியர் தினத்தில் இளைய சமூதாயம் தெரிந்து கொள்வது சாலச் சிறந்தது என்கிறார் ஓய்வுபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கே. கருணாகர பாண்டியன்.
அவர் மேலும் கூறியதாவது:
தஞ்சையில் உள்ள கண்டியூரில் 1905-ம் ஆண்டில் பிறந்தவர் அ. சீனிவாசராகவன். வஉசி கல்லூரியில் முதல்வராக பணி ஏற்றபோது, பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகளை செய்தவர். அரசு உதவித் தொகையை வலி யுறுத்தி, தூத்துக்குடி பகுதியில் கிராமப்புற மாணவர்களை அக்கல்லூரியில் பெருமளவில் சேர்த்தார்.
பொறுமையின் சிகரம்
முக்கிய பிரமுகர் ஒருவர், ‘‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டபோது, வஉசி கல்லூரியிலுள்ள 1,600 மாணவர்களும் தனது பிள்ளைகள்தான்’’ என, வாயடைக்கச் செய்தார்.
ஒருமுறை, அவரது அறைக்குள் நுழைந்த சில மாணவர்கள் தரம் தாழ்ந்து நடந்து கொண்டனர். இதை அவர் புன் முறுவலுடன் சகித்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த அந்த மாணவர்களில் ஒருவரின் தந்தை சீனிவாசராக வனிடம் மன்னிப்பு கேட்கச் சென்றபோது, ‘ இளம் ரத்தம் அப்படித் தான் இருப்பார்கள். உரிமையுடன் என்னிடம் தானே கோபித்துக் கொண்டனர். என் பிள்ளைகள்தானே என்றவர், அதில் ஒரு மாணவருக்கு முதுகலை படிக்க உதவினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக முதல் துணைவேந்தராக தெ.பொ. மீனாட்சிசுந்தரம் இருந்தபோது, சீனிவாசராகவன் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்தார். பிஎட் படிப்பை இரண்டு ஆண்டாக மாற்றினால் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியை அளிக்கலாம் என, பாடத்திட்ட உறுப்பினர்கள் தீர்மானித்தனர். ஓராண்டுக்குள் பயிற்சி முடித்து, வேலைக்கு சென்றால் குடும்பச் சுமையை தந்தையுடன் சிலர் பகிர்ந்து கொள்ளலாம். ஓராண்டுக்குள் பயிற்சி அளிக்காத ஆசிரியர் வேலைக்கே தகுதி யற்றவர்கள் என, விவாதித்து பிஎட் படிப்பை ஓராண்டாக்கிய பெருமை அவருக்கு உண்டு.
அன்றைக்கு புதுமுக வகுப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கல்லூரியில் பட்டப் படிப்பில் சேர முடியும்.
புதுமுக மாணவர்சேர்க்கை குறைந்தால் இளைய ஆசிரியர்கள் பணி இழக்கும் சூழலைத் தடுக்க, ஒரு வகுப்பில் 80 மாணவர் எண்ணிக்கையை 40 ஆக குறைக்கக் கோரி அரசுக்கு கடிதம் எழுதி, அதன் மூலம் பல ஆசிரியர்களின் பணியிழப்பை மீட்டெடுத்தவர். பணியின் மீதான பற்றால் மனைவி இறந்த மறுநாளே வகுப்பெடுக்க வந்தபோது, ‘புதைகுழி தோண்டுவோர் உரையாடல்’ பற்றிய பாடமெடுத்தார். மனைவி மரணத்தை மனதில் வைத்து, பிறப்பு, இறப்பு, ஆன்மா, தேடல், செல்வந்தன், ஏழை, ஆண், பெண், படித்தவர், படிக்காதவன் யாராக இருந்தாலும், இறுதியில் மண்டை ஓடும், சில எலும்பு மட்டுமே மிச்சம் என்ற ஸ்லோகங்களை கற்றுத் தந்தவர் அவர். அவரது ‘வெள்ளை பறவை’ புத்தகம் சாகித்ய அகாதமி விருது பெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT