Published : 05 Mar 2023 04:25 AM
Last Updated : 05 Mar 2023 04:25 AM
மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கத்தில் நீடிக்கும் முட்டுக்கட்டையை விலக்கி சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க முதல்வர் ஸ்டாலின் முக்கியத் தேவையான ஓடு பாதை விரிவாக்கப் பணியை தொடங்க நவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட தொழில் முனைவோர், பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மதுரை விமானநிலையத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு மட்டுமில்லாது, ஸ்ரீலங்கா, துபாய், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கும் விமான சேவை நடக்கிறது. மற்ற நாடுகளுக்கு விமான சேவை தொடங்குவதற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்காததால் தென் மாவட்ட மக்கள் திருச்சி, கோவை, சென்னை மற்றும் திருவனந்தபுரம் சென்று வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
கோயம்புத்தூர், விஜயவாடா, ஷீரடி, கண்ணுர் மற்றும் திருப்பதி விமான நிலையங்கள் குறைந்த அளவில் பயணிகளைக் கையாண்டு வந்தாலும், சர்வதேச விமான நிலையங்களாக மத்திய அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் மதுரை விமான நிலையத்தையும் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று தென் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், தொழில் முனைவோர், பயணிகள், பொதுமக்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விமான சேவையைத் தொடங்க விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனாலும், பெரிய விமானங்கள் வந்து செல்லும் அளவுக்கு மதுரை விமானநிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்படாததால், சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது மதுரை விமான நிலைய ஓடுபாதை 7,500 அடி உள்ளது. இதனை 5 ஆயிரம் அடி அதிகரித்து 12,500 அடியாக உயர்த்தவே விமானநிலைய விரிவாக்கப் பணி நடக்கிறது. ஆனால், ஓடுபாதை விரிவாக்கத்தை தவிர மற்றப் பணிகள் தற்போது நடக்கிறது.
விமான நிலைய விரிவாக்கப் பணிக்குத் தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டு, நிலம் வழங்கிய தனி நபர்களுக்கான பணமும் வழங்கப்பட்டு விட்டது. அதனால், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சில மாதங்களுக்கு முன்பு, உடனடியாக ஓடுபாதை விரிவாக்கப் பணி தொடங்கும் என்றார்.
ஆனால், தற்போது ஓடுபாதை விரிவாக்கப் பகுதியில் 2 நீர்நிலைகளின் சிறு பகுதி இருப்பதாகவும் இந்தப் பகுதிகள் அரசிடம் உள்ளதால் அதனை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி வகை மாற்றம் செய்து, விமான நிலையத்துக்கு எடுக்க முதல்வர் தலைமையிலான குழு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
அதனால், முதல்வர் உடனடியாக தலையீட்டு விமான நிலையம் விரிவாக்கத்துக்கு ஒப்புதல்களை வழங்கி பணியைத் தொடங்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: மதுரை - தூத்துக்குடி சாலையில் ‘அன்டர் பாஸ்’ முறையில் ஓடுபாதையை நீட்டிக்க மத்திய விமானப் போக்குவரத்து துறை ஒப்புதல் வழங்கியது. ஆனால், ‘அன்டர் பாஸ்’ அமைக்க மாநில அரசு நிதி வழங்க வேண்டும் என கூறி விட்டது. மைசூர், வாரணாசி விமான நிலையங்களிலும் ‘அன்டர் பாஸ்’ முறையில் ரன்வே உள்ளன.
டெல்லி டெர்மினல்-3-ல் தற்போது அன்டர் பாஸ் முறையில் ரன்வே அமைக்க பணி நடக்கிறது. ஆனால், அன்டர் பாஸ் அமைக்க ரூ.800 கோடி செலவாகும் எனக் கூறப்படுகிறது. அதனால், இந்த நிதியை செலவிட தயங்கும் மாநில அரசு, அன்டர் பாஸ் அமைக்காமல் மதுரை - தூத்துக்குடி சாலையை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டு அந்த சாலையிலேயே ஓடுபாதையை நீட்டிக்க ஆலோசித்து வருகிறது.
ஆனால், இதுவரை மதுரை-தூத்துக்குடி சாலையை எது வழியாக திருப்பி விடலாம் என முடிவு செய்யவில்லை. அதற்கான நிலமும் ஆர்ஜிதமும் செய்யப்படவில்லை. இதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். ஏற்கெனவே விமானநிலைய விரிவாக்கத்துக்காக 615.92 ஏக்கர் நிலத்தை கையப்படுத்தும் பணி 2009-ம் ஆண்டில் தொடங்கி 2022 ஆண்டில் தான் முடிந்துள்ளது.
மீண்டும் நில ஆர்ஜிதம் செய்ய வேண்டுமென்றால் மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத் திட்டம் மேலும் தாமதம் ஆகலாம். தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT