Published : 05 Mar 2023 04:25 AM
Last Updated : 05 Mar 2023 04:25 AM

அமராவதி ஆறு, சண்முகாநதி, நங்காஞ்சியாறு, குடகனாறு இணைப்பு திட்டம்: முன்னுரிமை கொடுப்பாரா முதல்வர்?

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயப் பரப்பை அதிகரிக்க, குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, கொண்டு வரப்பட்ட நதி நீர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த முதல்வர் முன்வர வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் ஆய்வு மேற்கொள்கிறார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தவேண்டிய திட்டங்கள் குறித்து முதல்வர் கவனத்தில் கொண்டு செயல்படுத்த முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு திண்டுக்கல் மாவட்ட மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நதிநீர் இணைப்பு திட்டம்: திண்டுக்கல் மாவட்டம் முழுமையாக விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டம். பல்வேறு வகையான காய்கறிகள், பூக்கள், நெல், கரும்பு, மலைப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. தமிழகத்தில் பெரிய மார்க்கெட்களில் ஒன்றாக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் இருப்பதற்கு மாவட்டத்தில் விளையும் அதிக காய்கறிகள் தான் காரணம்.

முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள நிலையில், பயிர்களை காக்க நீர் தேவை அதிகளவில் உள்ளது. மேலும் கோடைகாலத்தில் குடிநீர் தேவைக்கு ஒவ்வொரு ஆண்டும் நகரம் முதல் கிராமப்புற மக்கள் வரை சிரமப்படுகின்றனர். பருவநிலை மாற்றத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் வறட்சிக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது.

இதையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அமராவதி ஆற்றில் ஓடும் நீர் காவிரி ஆற்றில் கலக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநியில் உள்ள பாலாறு பொருந்தலாறு, வரதமா நதியிலிருந்து சண்முகநதி வழியாக ஓடும் நீர் அமராவதி ஆற்றில் கலந்து காவிரி ஆற்றுக்குச் செல்கிறது.

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நல்லதங்காள், நங்காஞ்சியாறு ஆகிய ஆறுகளிலில் இருந்து செல்லும் நீரும், திண்டுக்கல் அருகேயுள்ள குடகனாற்றில் செல்லும் நீரும் காவிரி ஆற்றில் சேர்ந்து கடலில் கலக்கிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து காவிரியில் கலக்கும் உபரி நீர் வீணாகிறது.

இதைத் தவிர்க்க அமராவதி ஆறு, சண்முகாநதி, நங்காஞ்சியாறு, குடகனாறு ஆகியவற்றை இணைத்து காவிரியில் கலக்கும் உபரி நீரை சேமிக்கும் திட்டத்துக்காக 2018- ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. முதற்கட்டமாக ஆய்வுப்பணிக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியது.

இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (திட்டம் மற்றும் வடிமைப்பு) மதுரை, மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி காவிரி ஆற்றில் கலக்கும் ஆறுகளை ஒன்றிணைக்க ரூ.700 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. திட்ட அறிக்கை தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஒரு லட்சம் ஹெக்டேர் விளைநிலம் பயன்பெறும்: பொதுப்பணித் துறையினர் தயாரித்துள்ள திட்ட அறிக்கையின்படி நதிநீர் இணைப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, பழநி, ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர், வட மதுரை.

குஜிலியம்பாறை ஒன்றிய பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதன்மூலம் விவசாயத்துக்கு பயன்படாமல் கிடக்கும் தரிசு நிலங்களையும் விளை நிலமாக்கலாம். நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் வழிநெடுகிலும் கண்மாய், குளங்களில் நீர் நிரப்பப்படும்.

இதன் மூலம், கிராமப்புற பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியை முற்றிலும் போக்கலாம். எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் நதிநீர் இணைப்பு திட்டத்தை உடடியாக தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள், பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

நிதி அதிகம் தேவைப்படுவதால் மத்திய அரசின் நிதியை கேட்டுப்பெற்றாவது இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த ஒரு திட்டத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றினாலே மாவட்டம் முழு வளர்ச்சி பெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x