Published : 05 Mar 2023 04:25 AM
Last Updated : 05 Mar 2023 04:25 AM

முடங்கி வரும் திண்டுக்கல் பூட்டு, இரும்பு பெட்டக தயாரிப்பு ஆலைகள்: தொழில் வளர்ச்சிக்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொழில் துறையில் சிறந்து விளங்கியது. புகழ் பெற்ற திண்டுக்கல் பூட்டு, இரும்பு பெட்டகம் (லாக்கர் பாக்ஸ்) தயாரித்தல், தோல் தொழிற்சாலைகள், நூற்பாலைகள் என பல தொழில்கள் இயங்கி வந்தன.

இதனால் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது. காலப் போக்கில் இவை படிப்படியாக நசிந்துவிட்டன. புவிசார் குறியீடு பெற்றும் சந்தைப்படுத்துதலில் சாதிக்க முடியாததால் பூட்டுத் தொழில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. தோல் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்து விட்டது.

விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே தோல் தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றனர். இருந்த தொழில்களும் நசிந்து விட, புதிய தொழில்களும் இம்மாவட்டத்துக்கு வராததால், திண்டுக்கல் மாவட்ட மக்கள் பலரும் வேலை வாய்ப்பு தேடி வெளி மாவட்டங்களுக்கு செல்கின்றனர். திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு பெற்றது போல், பாரம்பரிய தொழிலாக உள்ள திண்டுக்கல் இரும்பு பெட்டகத்துக்கு (லாக்கர் பாக்ஸ்) க்கும் புவிசார் குறியீடு பெற முயற்சிக்க வேண்டும்.

ஒட்டன்சத்திரத்தில் தக்காளி ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலை, நத்தத்தில் மாம்பழ கூல் தொழிற்சாலை, நிலக்கோட்டையில் சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை என, அந்தந்த பகுதி சார்ந்த தொழில்கள் என தொழில் திட்டங்கள் நிறைய உள்ளன. ஆனால் எதுவும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வில்லை.

வேடசந்தூர் பகுதியில் சிப்காட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டும், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை. இங்கு தொழிற்சாலைகள் அமைந்தால் வேடசந்தூர் பகுதியில் இருந்து கரூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் அவரவர் ஊருக்கு அருகிலேயே பணிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

ஏற்கெனவே இருந்த பாரம்பரிய தொழில்களும் நசிந்து, சில ஆண்டுகளாக தொழில்கள் எதுவும் மாவட்டத்தில் தொடங்கப்படாததால் தொழில்துறையில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக திண்டுக்கல் உள்ளது.

மாவட்டம் தொழில் வளர்ச்சியில் பழைய நிலையை எட்டும் போது வேலை வாய்ப்புகள் பெருகி, இங்குள்ள மக்கள் வெளி மாவட்டத்துக்கு வேலை தேடிச் செல்லும் நிலை ஏற்படாது. மீண்டும் பழையநிலைக்கு கொண்டு வர தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x