Published : 05 Mar 2023 04:25 AM
Last Updated : 05 Mar 2023 04:25 AM

பழநி யாத்ரா நிவாஸ், 2-வது ரோப்கார் திட்டம் விரைவு படுத்தப்படுமா? - முதல்வரிடம் நடவடிக்கையை எதிர்பார்க்கும் மக்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்கள் எதிர்பார்த்திருக்கும் திட்டங்களை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிபார்ப்பு எழுந்துள்ளது.

பழநி யாத்திரா நிவாஸ்: திருச்சி அருகேயுள்ள ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் குறைந்து கட்டணத்தில் தங்கிச் செல்ல, குடும்பத்தினர், குழுவினர் என தங்குவதற்கு வசதியாக ‘யாத்ரா நிவாஸ்‘ என்ற விடுதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கட்டப்பட்டது. ஸ்ரீரங்கம் செல்லும் பக்தர்கள் குறைந்த கட்டணத்தில் நிறைவாக தங்கிச்செல்லும் வசதி யாத்திரா நிவாஸ்- ல் உள்ளது.

இது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல் பழநியில் ‘யாத்ரா நிவாஸ்’ பக்தர்கள் தங்கும் விடுதிகள் கூடுதல் அறைகளுடன் கட்ட தமிழக அரசு முன்வரவேண்டும். தைப்பூச, பங்குனி உத்திர விழா காலங்களில் பழநி வரும் பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் தவிப்பது தொடர்கிறது.

இதற்குத் தீர்வுகாண அறநிலையத்துறை மூலம் பக்தர்கள் குறைந்த கட்டணத்தில் தங்கிச்செல்ல கூடுதல் தங்கும் விடுதிகளை கட்ட முதல்வர் உத்தரவிட வேண்டும். யாத்ரா நிவாஸ் விடுதி கட்டுவதற்கு அறநிலையத்துறையில் கோயிலுக்கு சொந்தமான இடங்களும் உள்ளன. உடனடியாக இந்த திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2-வது ரோப் கார் திட்டம் தாமதம்: பழநியில் விழாக் காலங்களில் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் மூலமே பக்தர்கள் அதிகம் பயணிக்கின்றனர். இந்நிலையில் ஒரு இழுவை ரயில் மலைக்கோயில் சென்று அடிவாரம் திரும்ப 15 நிமிடங்கள் ஆகிறது. மொத்தம் 3 இழுவை ரயில் இயங்கிய நிலையிலும் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து பயணிக்கவேண்டிய நிலை உள்ளது. இதனால் சிறுவர்கள், முதியோர் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இதை தவிர்க்க 2 ஆண்டுகளுக்கு முன்பு 2-வது ரோப்கார் திட்டம் செயல்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்தப் பணியை தீவிரப்படுத்தினால் அடுத்த தைப்பூச விழாவுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும். 2-வது ரோப் கார் திட்டத்தை முதல்வர் விரைவுபடுத்த உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.

மன்னவனூரில் காவல் நிலையம்: கொடைக்கானல் மலைப்பகுதியில் கொடைக்கானல், தாண்டிக்குடி ஆகிய காவல்நிலையங்கள் உள்ளன. கீழ்மலைப்பகுதி கிராமங்களுக்கு மத்தியில் தாண்டிக்குடி காவல்நிலையம் உள்ளது. இதனால் மக்கள் எளிதில் அணுகமுடிகிறது. ஆனால் கொடைக்கானல் நகரில் உள்ள காவல் நிலையம் கட்டுப் பாட்டில் 50 கி.மீ. தூரத்துக்கு மேல் உள்ள மேல் மலை கிராம பகுதிகள் வருகின்றன.

இப்பகுதி பிரச்சினைகளுக்கு மக்கள் சென்று வரவும், விசாரணைக்கு போலீஸார் சென்று வரவும் சிரமம் உள்ளது. இதை தவிர்க்க மேல்மலை கிராமமான மன்னவனூரில் ஒரு காவல்நிலையம் அமைக்கவேண்டும் என்ற கோரி்க்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இத்திட்டம் அரசின் பரிசீலனையிலும் உள்ளது. முதல்வர் இத்திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொகுதிக்கு ஒரு கல்லூரி திட்டம்: திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு கலைக்கல்லூரி நிறுவப்பட்டு வருகிறது. ஏற்கெனவே திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, வேடசந்தூரில் கலைக்கல்லூரிகள் இயங்கிவரும் நிலையில், கடந்த ஓராண்டில் ஒட்டன்சத்திரம், ஆத்தூர் தொகுதிகளில் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு விட்டன.

இதேபோல் கிராமங்கள் நிறைந்த நத்தம் தொகுதியில் ஒரு அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x