Published : 04 Mar 2023 07:21 PM
Last Updated : 04 Mar 2023 07:21 PM

வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்திகளை பரப்பியது பாஜக தலைவர்கள்தான்: கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன் | கோப்புப்படம்

சென்னை: "தமிழ்நாட்டின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் பொய்ச் செய்திகளையும், வதந்திகளையும் பரப்பியவர்கள் பாஜக தலைவர்கள்தான். 9 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் பாஜக வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், இருக்கும் வேலை வாய்ப்புகளை பாதுகாப்பதற்கும் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இளைஞர்களை வேலை தேடி அலைய வைக்கிறது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிஹார் மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது போல சில வீடியோ காட்சிகளை முன்வைத்து, பாஜகவினர் பிஹார் சட்டமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பிரசாந்த் உம்ராவ் என்கிற பாஜகவின் உத்தரப் பிரதேச மாநில செய்தித் தொடர்பாளர் 12 பிஹார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டினரால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டதாக ஒரு வதந்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதையே பல்வேறு தரப்பினருக்கும் பகிர்ந்துள்ளார். இதேபோன்று மிக அதிக விற்பனை கொண்ட வட இந்திய பத்திரிகையும் இத்தகைய செய்திகளை வெளியிட்டுள்ளது. இதையொட்டி பிஹாரிலும் தமிழ்நாட்டிலும் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பாஜகவினர் பரப்பும் வீடியோ காட்சிகள் தமிழ்நாட்டில், ஹைதராபாத்தில், ராஜஸ்தானில் நடந்த தனிநபர் மோதல்கள் மற்றும் தமிழ்நாட்டிலேயே வடமாநிலத்தைச் சார்ந்த இருபகுதி ஊழியர்களுக்குள் நடந்த மோதல்தான் என்று ஆதாரங்களோடு Alt News என்கிற உண்மை கண்டறியும் இணையதளம் தெளிவுபடுத்தி இருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் போன்றோர் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் பேசியிருக்கிறார்கள். வெறுப்பு அரசியலை மூலதனமாக்கும் சங் பரிவாரம், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் என்று ஆரம்பித்து தற்போது இரண்டு மாநிலங்களுக்கு இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தி குளிர்காய முயற்சித்திருக்கிறது. அத்தனையும் பொய்ச் செய்தி என்றான பிறகு தற்போது தமிழ்நாட்டு பாஜக தலைவர்கள் சமாதான தூதுவர்கள் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் பொய்ச் செய்திகளையும், வதந்திகளையும் பரப்பியவர்கள் பாஜக தலைவர்கள்தான். 9 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் பாஜக வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், இருக்கும் வேலை வாய்ப்புகளை பாதுகாப்பதற்கும் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இளைஞர்களை வேலை தேடி அலைய வைக்கிறது.

கரோனா காலத்தில் கூட இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்புவதற்கு ரயில் விடாமலும், ரயிலுக்கு கட்டணம் செலுத்தியே ஆக வேண்டுமென்றும் கந்துவட்டிக் காரரைப் போல் நடந்து கொண்ட மோடியும் அவரது கட்சியும் இல்லாத ஒன்றை பூதாகரமாக்கி இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக கவலைப்படுவதாகச் சொல்லி முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசும் காவல்துறையும் வதந்தி பரப்பியோர் மீதும், வெறுப்பைத் தூண்டியவர்கள் மீதும் கடுமையான உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

வேலையின்மை உச்சத்தில் இருக்கும் காலத்தில் அதற்கெதிராக ஒன்றுபட்டுப் போராட வேண்டிய நிலையில் இடம்பெயர் தொழிலாளர்களை மொழி அடிப்படையில் மோதவிட்டு வேலையின்மை பிரச்சினையிலிருந்து திசைதிருப்பும் சங்பரிவாரின் வழக்கமான நடைமுறையே இந்த அவதூறு பிரச்சாரம். வெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் விழிப்போடு இருந்து முறியடிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேண்டுகோள் விடுக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x