Published : 04 Mar 2023 07:08 PM
Last Updated : 04 Mar 2023 07:08 PM
சென்னை: "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின், அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தை சீர்குலைக்கிற எவராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற முதுமொழிக்கேற்ப தமிழகத்தில் வர்த்தக, தொழில் வேலை வாய்ப்புகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் நீண்டகாலமாக பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக சேவைத்துறை, கட்டுமானம், சிறு, குறு மற்றும் பெரும் தொழில்கள் ஆகியவற்றில் பணிபுரிந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் சுதந்திரமாக நடமாடவும், குடியிருக்கவும், வேலை வாய்ப்பு வசதிகளுக்கு உகந்த மாநிலமாக இருப்பதால் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி வருகிறார்கள். தமிழக அரசை பொறுத்தவரை எந்த வேறுபாடும் இன்றி அனைத்து மாநில தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடாக ஏப்ரல் 2021 வரை ரூ.6 கோடி வழங்கப்பட்டிருப்பதாக தமிழக முதலமைச்சர் கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.
ஆனால், தமிழகத்தின் அமைதியை சீர்குலைப்பதற்காக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற 4 வீடியோக்கள் போலியாக தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருப்பதை காவல் துறை கைப்பற்றியிருக்கிறது. இத்தகைய வதந்தி பரப்பியவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வடமாநிலத்தவர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை காவல் துறை அறிவித்திருக்கிறது. வட மாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் கூறியிருப்பதை வரவேற்கிறேன்.
இந்திய அரசமைப்பின் உறுப்பு 19 இன் படி இந்திய நிலப்பகுதி எங்கும் சுதந்திரமாக நடமாட, குடியிருக்க, தொழில் செய்ய வேலைபெறுவது அடிப்படை உரிமையாக கூறப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தை சீர்குலைக்கிற எவராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT