Published : 04 Mar 2023 05:50 PM
Last Updated : 04 Mar 2023 05:50 PM
சென்னை: ஹோலி பண்டிகையைக் கொண்டாடவே பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றாலும், தமிழகத்தில் ஒரு சில வட மாநிலத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மத்தியில் போலி வீடியோக்கள் அச்சதை ஏற்படுத்தியுள்ளதும் தெரிய வருகிறது.
பிஹார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்தச் தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போல சில வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவியது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், படங்களையும் தமிழகத்தில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வட மாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல் துறையின் உதவி எண்களுக்கு தகவல் தாருங்கள்” என்று கூறியிருந்தார்.
இதற்கு முன்னதாகவே வட மாநில தொழிலாளர்களுக்கான உதவி எண்களை தமிழக காவல் துறை அறிவித்தது. இதன்படி, வட மாநிலத் தொழிலாளர்கள் 0421-22-3313, 9498101300, 9498101320 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக காவல் துறை, வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக 3 பேர் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இவ்வாறு தமிழக அரசும், காவல் துறையும் தொடர்ந்து இந்தப் பிரச்சினை தொடர்பாக விளக்கம் அளித்து வரும் நிலையில், சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் சொந்த ஊருக்குச் செல்ல அதிக எண்ணிக்கையில் வட மாநில தொழிலாளர்கள் வந்து கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் சென்றோம். சென்ட்ரல் ரயில் நிலையித்திற்கு உள்ளேயும், வெளியேவும் வட மாநில தொழிலாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, பெரும்பாலானவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்குச் செல்வதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, சரளமாக தமிழ் பேசும் ராஜஸ்தானைச் சேர்ந்த பண்டித் என்பவரிடம் விரிவாக பேசினோம்.
அவர் கூறுகையில், "நான் சென்னையில் சின்னமலை பகுதியில் ஒரு டீக்கடையில் பணிபுரிந்து வருகிறேன். நாங்கள் ஹோலி பண்டிகை கொண்டாடவே சொந்த ஊருக்கு செல்கிறோம். பணிபுரியும் இடத்தில் கிடைக்கும் ஊதியத்தை மாத, மாதம் ஊருக்கு அனுப்ப மாட்டோம். இதுபோன்ற பண்டிகை நாட்களில் மொத்தமாக ஊருக்கு கொண்டு செல்வோம். இதன்படி தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு தான் நாங்கள் சொந்த ஊருக்கு செல்வோம். எங்களுக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை" என்றார்.
ஆனால், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் இந்த வீடியோ தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார், அம்மாநிலத்தைச் சேர்ந்த போனி குமார். அவர் கூறுகையில், "நாங்கள் உண்மையாகவே ஹோலி பண்டிகைக்குத்தான் சொந்த ஊருக்கு செல்கிறோம். ஆனால், இந்த வீடியோ வந்ததில் இருந்து, எங்களின் குடும்பத்தினரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே உள்ளது. அவர்களிடம் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தொடர்ந்து கூறி வருகிறோம்" என்றார்.
இதனைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெளியே வியாபாரம் செய்து கொண்டு இருந்த வட மாநில தொழிலாளர் ஒருவரிடம் விசாரித்தபோது, "நான் 2 மாதங்களுக்கு முன்புதான் ஊரில் இருந்து வந்தேன். அதனால்தான் பண்டிக்கைக்கு ஊருக்கு செல்லவில்லை” என்று தெரிவித்தார். வீடியோ குறித்து உங்களுக்கு தெரியுமா என்று கேட்டதற்கு, “அந்த வீடியோவை நாங்கள் பார்த்தோம். ஆனால் அதுபோன்று எங்களுக்கு இதுவரை நடந்தது இல்லை. தற்போது வரை பணிபுரியும் இடங்களில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை." என்றார்.
ஒரே நேரத்தில் இவ்வளவு வட மாநிலத்தவர்கள் ரயில் நிலையத்திற்கு வந்தது உண்டா என்று அங்கு பணியாற்றி வரும் ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். அதற்கு அவர், “பண்டிகை காலங்களில் இதுபோன்று அதிக அளவில் வட மாநில தொழிலாளர்கள் வருவார்கள். பண்டிகை அல்லாத காலங்களில் குறைவான எண்ணிக்கையில்தான் வட மாநில தொழிலாளர்களின் வருகை இருக்கும்" என்றார்.
இவற்றை எல்லாம் பார்க்கும்போது போலி வீடியோக்கள் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மத்தியில் சிறிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
வாசிக்க > வட மாநில தொழிலாளர்கள் @ தமிழகம் 2 - இவர்களில் பலருக்கும் இந்தியே தெரியாது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT