Published : 17 Sep 2017 11:38 AM
Last Updated : 17 Sep 2017 11:38 AM

இருமொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிப்போம்: ‘யாதும் தமிழே’இரண்டாம் நாள் விழாவில் கவிஞர் வைரமுத்து உறுதி

இருமொழி கொள்கையுடன் வந்தால் மட்டுமே, நவோதயா பள்ளிகளை தமிழர்கள் அனுமதிப்பார்கள் என்று கவிஞர் வைரமுத்து உறுதியுடன் தெரிவித்தார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் 5-வது ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாடும் வகையில் ‘யாதும் தமிழே’ என்ற 2 நாள் நிகழ்ச்சி, சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர் முத்தா கான்செர்ட் ஹாலில் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. 2-ம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று காலை நாதஸ்வரம், தவில் கலைஞர்களின் மங்கல இசை, புத்தர் கலைக் குழுவின் பறையாட்டம் ஆகியவற்றுடன் தொடங்கின. நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுக்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

இரண்டாம் நாள் நிகழ்வில் கவிஞர் வைரமுத்துவும் அவரது மகன் மதன் கார்க்கியும் கலந்துகொண்டனர். இலக்கியம், திரைத் தமிழ் ஆகிய துறைகளில் சாதனைகள் படைத்துவரும் இருவரும் இதுவரை ஒரே மேடையில் தோன்றிப் பேசியதில்லை. ‘தி இந்து’ நாளிதழின் அழைப்பை ஏற்று ‘தலைமுறைகள் பேசும் தமிழ்’ என்ற தலைப்பில் இருவரும் உரையாடினர்.

கணினியை ஆளும் தமிழ்

பாடலாசிரியர், கதாசிரியர் ஆகிய அடையாளங்களைத் தாண்டி, கணினியில் தமிழ் மொழியின் பயன்பாடு குறித்து கடந்த 15 ஆண்டுகளாக தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் மதன் கார்க்கி முதலில் பேசினார். அவர் பேசும்போது, “அப்பா இருக்கும் மேடையில் பேசுவதற்கு முதலில் பயந்தேன். இதுவொரு நல்ல மேடை, தமிழ் குறித்து நீ செய்துகொண்டிருக்கிற நல்ல விஷயங்களை அனைவருக்கும் கொண்டுபோய்ச் சேர்க்க இது சிறந்த மேடை என்று அப்பா துணிவு தந்தார். எல்லா ஊடகங்களிலும் தமிழ் வலம் வருவதற்கு ‘தி இந்து’ போன்ற பத்திரிகைகள் இணையம் வழியே செய்தியைப் பரப்புவது போன்ற பலரின் உழைப்பே காரணம்’’ என்றார்.

மேலும் அவர் பேசியதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது தமிழையும் கணினியையும் ஒரு புள்ளியில் இணைக்க வேண்டும் என்ற காதல் எனக்கு உருவானது. அதற்காகவே பணியில் இருந்து விலகி, கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கினோம். அதன்மூலம் நானும் எனது குழுவினரும் பல உலக மாநாடுகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கிறோம். பல மொழிக்கருவிகள், அகராதிகள், செயலிகள் ஆகியவற்றை உருவாக்கி இருக்கிறோம்.

அவற்றில் தமிழ், ஆங்கிலச் சொற்களுக்கு பொருள் தரும் ‘அகராதி’, தமிழ்ச் சொற்களையும் தமிழ் ஒலியியலையும் அடிப்படையாகக் கொண்டு ஒன்பது லட்சம் தமிழ்ப் பெயர்களை உருவாக்கித்தரும் ஆற்றல் கொண்ட ‘பேரி’, சொற்களை, வரிகளை, தமிழ் - ஆங்கில ஒலிபெயர்ப்பு செய்யும் ‘ஒலிங்கோ’, தமிழ்ச் சொற்களுக்கு எதுகை, மோனை இயைபைக் கண்டறிந்து தரும் ‘எமொனி’, எண்களை அவற்றுக்கு நிகரான சொற்களாக்கும் ‘எண்’, சொல், பொருள், வரிசை எண் கொண்டு திருக்குறளை உடன் தேடியெடுக்கவும் குறளைப் பத்துக்கும் அதிகமான இந்திய மொழிகளில் படிக்கவும் வகை செய்யும் ‘குறள்’, குழந்தைகள் தமிழ்ச் சொல் விளையாட்டு விளையாட ‘ஆடுகளம்’ ஆகிய செயலிகளைக் கண்டறிந்து அவற்றைப் பொதுவெளியில் இலவச மொழிக்கருவிகளாக அளித்திருக்கிறோம். அவற்றை இலவசமாக தரவிறக்கி, ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாச் உள்ளிட்ட கையடக்க கருவிகளிலும் கணினியிலும் பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.

இவற்றுடன் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் மூலம் புதிதாக உருவாகும் தமிழ்ச் சொற்களை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது, உலகக் குழந்தைகள் தமிழைக் கற்றுக்கொள்ளவும், மற்ற மாநிலத்தவர் தமிழைக் கற்றுக்கொள்ளவும் தமிழ்ப் பாடத்திட்டங்களை உருவாக்கி வருவது ஆகியவற்றில் தற்போது முனைப்புடன் ஈடுபட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கிய கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் (Karky Research Foundation) மூலம், தனது குழுவினருடன் இணைந்து செய்துவரும் மொழி ஆராய்ச்சிகளை மதன் கார்க்கி விரிவாக எடுத்துக் கூறினார். அவற்றில் அவர்களது திட்டப்பணிகள், தமிழ் மொழி கடந்து வந்த பாதை, நாம் அதிகம் பயன்படுத்திவரும் தமிழ் எழுத்துக்கள், சொற்கள், தமிழ் மொழி தொடர்பாக எதிர்காலத்தில் நாம் எதிர்நோக்கவிருக்கும் சவால்கள் ஆகியவற்றை ‘பவர் பாயின்ட்’ திரையில் காட்டி விளக்கினார்.

அவரைத் தொடர்ந்து வைரமுத்து பேசினார். அப்போது அவர், ‘‘யாதும் தமிழே’ என்று ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் சூட்டியிருக்கும் இந்தத் தலைப்பு காலத்தின் கருப்பொருள். 5-ம் ஆண்டில் அடிவைக்கும் ‘தி இந்து’ தமிழுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மதன் கார்க்கி பேசும்போது, ‘அப்பா இருக்கிற மேடையில் பங்கேற்க பயமாக இருக்கிறது’ என்றார். ஆராய்ச்சிகள் குறித்து அவர் பேசி முடித்ததும் இப்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது… நீ இருக்கும் மேடைகளில் இனி உன்னோடு பங்கேற்க எனக்கு பயமாக இருக்கிறது’ என குறிப்பிட்டார்.

‘‘ஒரு தலைமுறை எப்படித் தாவிச் செல்கிறது. இந்த மேடையில் மதன் கார்க்கிக்கும் எனக்கும் போடப்பட்ட நாற்காலிகளுக்கு இடையிலான இடைவெளிதான் தலைமுறை இடைவெளி, ஆனால், இந்த மூன்றடி தூரத்தில் ஒரு இளைஞன் 300 ஆண்டுகள் முன்னோக்கிப் பயணப்படுகிறான் என்பது மதன் கார்க்கியின் பெருமையல்ல, அது தமிழின் பெருமை, தமிழ் வளர்ச்சியின் பெருமை. மதன் கார்க்கியைப்போன்ற ஆயிரம் இளைஞர் தமிழுக்குத் தேவை. அவர்களை வீடுதோறும் உருவாக்குங்கள். தமிழின் மிகப்பெரிய பயனே, அது கற்றவனைக் கணிப்பொறி போல் திறன்மிக்கவனாக ஆக்குவதுதான்’’ என்றார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘சட்டப்பேரவைக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலில் பலத்தை நிரூபித்தால் போதும். பள்ளி, கல்லூரி தேர்வுகளில் ஆண்டுக்கு ஒருமுறை நிரூபித்தால் போதும். நிலவு மாதம் ஒருமுறை நிரூபிக்கிறது. ஆனால், ஒரு நாளிதழ் தன்னை நித்தம் நித்தம் நிரூபிக்க வேண்டும். தமிழ், கலைகள், ஆன்மிகம், அறிவியல், அரசியல், பெண்ணியம், உலகியல், உளவியல் என எல்லாவற்றையும் தினம் தினம் ‘தி இந்து’ பத்திரிகை அள்ளித்தருவதைப் பார்க்கும்போது இது ஒருநாள் உழைப்பா, இல்லை ஓராண்டு உழைப்பா என்ற பிரமிப்பு எழுகிறது. இந்து தமிழின் இந்த அறிவியக்கத்தைத் தமிழர்கள் என்றும் வரவேற்பார்கள், உங்களோடு வருவார்கள் என்று வாழ்த்துகிறேன்” என்று கூறிய வைரமுத்து, தமிழ் மொழியின் பல்வேறு பெருமைகள் குறித்து விரிவாகப் பேசினார்.

அப்போது அவர், “ பிறமொழிகளை கற்கக் கூடாது எனச் சொல்பவன் பேதை. ஆனால், தாய்மொழியைக் கற்காமல் ஒருவன் மேதையாக முடியாது என்ற உண்மையை இந்த உலகுக்குச் சொல்ல வேண்டும். தமிழில் பத்து சதவீதச் சொற்கள் அழிந்துபோனால் 20 சதவீதச் சொற்கள் மொழியின் உள்ளே வருகின்றன. தமிழ் மொழியின் வேர்ச் சொற்கள் இன்னும் பத்து நூற்றாண்டுகளுக்கு தாங்கும்” என்று குறிப்பிட்டவர் தனது உரையில் இறுதியில் நவோதயா பள்ளிகள் குறித்துப் பேசினார்.

இருமொழி கொள்கை அவசியம்

‘‘நவோதயா பள்ளிகளைப் பற்றி நாடெங்கும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதுபற்றி ‘யாதும் தமிழே’ எனும் இந்த விழாவில் பேசாவிட்டால் வேறு எங்குபோய்ப் பேசுவது. என் கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். நவோதயா என்ற கட்டமைப்பு குறித்தோ, நவோதயாவுக்கு ஆண்டுக்கு இருபது கோடி மத்திய அரசு நிதி ஒதுக்குவது குறித்தோ, அதன் ஆசிரியப் பெருமக்களின் மாண்பு குறித்தோ, அங்கே படிக்கிற மாணவர்களின் கல்வித்தரம் குறித்தோ எங்களுக்குக் கருத்து வேறுபாடு இல்லை. எங்களுக்குள்ள வேறுபாடெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, இந்த மண்ணுக்கு என்று நாங்கள் சுவீகரித்துக்கொண்ட கொள்கை, ‘இருமொழிக் கொள்கை’. அந்த இருமொழிக் கொள்கையோடு வந்தால், நவோதயா பள்ளிகளை எழுந்து நின்று வரவேற்போம்” என்றார்.

செங்கோட்டைக்கும் கேட்கட்டும்

வைரமுத்து இப்படிப் பேசியதும் எழுந்து நின்ற பார்வையாளர்கள் அனைவரும், ஒரு நிமிடம் இடைவிடாமல் கரவொலி எழுப்பித் தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பேசிய வைரமுத்து “இந்தக் கரவொலி செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மட்டுமல்ல, செங்கோட்டைக்கும் கேட்கட்டும். அரசுகள் இருமொழிக் கொள்கையை ஏற்றிப் பிடித்து நவோதயா பள்ளிகளுக்கு வடிவம் கொடுத்தால் நவோதயா பள்ளிகள் நாடு முழுவதும் எழுக. இல்லையென்றால் அதைத் தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என்றார்.

பின்னர் மாநில மொழிகளைக் கட்டாயமாக்கிய முதல்வர்கள் குறித்து பேசும்போது, “கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களே.. தமிழ்நாட்டில் இருந்து உங்களை ஒரு கவிஞன் வாழ்த்துகிறேன்.

மலையாளத்தை நீங்கள் கட்டாயப்படுத்தியதற்காக. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களே… தெலுங்கு மொழி, எனும் தாய் மொழியைக் கட்டாயம் ஆக்கியதற்காக. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களே, வங்காளம் எனும் தாய் மொழியைக் கட்டாயம் ஆக்கியதற்காக தமிழ்நாட்டுக் கவிஞன் உங்களை வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டு முதல்வரை நான் பாராட்டும் காலம் எப்போது வருமென்று ஏங்கிக் கிடக்கிறேன். இதற்கு முன்னால் என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பாதீர்கள். கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். அதற்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் துணையிருக்கட்டும். அதற்கு நாங்களும் துணையிருப்போம்” என்றார் வைரமுத்து.

சிறப்பு நிகழ்ச்சிகள்

இதைத் தொடர்ந்து, ‘எவ்வழி செல்லும் நம் மொழி’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. எழுத்தாளர் சா.கந்தசாமி நெறியாள்கை செய்த இந்நிகழ்வில், சென்னை பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பாரதி ஹரிசங்கர், இரா.துரைப்பாண்டி, ஸ்ரீமதி கேசன், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ்.குருசங்கர், திரைப்பட இயக்குநர் ராம் ஆகியோர் பேசினர்.

‘ஊர்கா’ இசைக்குழுவின் ‘ராக் தாளம் பல்லவி’ இசை நிகழ்ச்சி, ‘புட் சட்னி’ ராஜ்மோகனின் ‘கற்றுக் கொண்டார்கள் பற்று கொண்டார்கள்’ சிறப்புரை, ‘தியேட்டர்காரன்’ நாடகக் குழுவினரின் ‘ப்ரோ, கொஞ்சம் தமிழ்ல பேசுங்க’ நாடகம், வீடியோ ஜாக்கி ஜெகனின் ‘ஏனுங்க தம்மாதுண்டு தமிழ்ல பேசுங்கண்ணா’ நிகழ்ச்சி ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

‘யாதும் தமிழே’ விழாவை ஜில்லட், மீரா சீயக்காய், ராம்ராஜ் காட்டன், அபிராமி ரைஸ், ஹமாம், ஆச்சி மசாலா, ஜீ தமிழ் தொலைக்காட்சி, பிக் எஃப்எம், ஏசிடி பைபர் நெட், ஏஜிஎஸ் சினிமாஸ் இணைந்து நடத்தின. விழாவில் ஆயிரக்கணக்கான வாசகர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x