Published : 04 Mar 2023 04:50 PM
Last Updated : 04 Mar 2023 04:50 PM

வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்க: தினகரன்

டிடிவி தினகரன் | கோப்புப்படம்

சென்னை: தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அக்குழுவின் பரிந்துரைகளின்படி அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெளிமாநில தொழிலாளர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருப்பது, அவர்களை தமிழக அரசு வரன்முறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. இதற்காகதான், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு, நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என்றும் ஏற்கெனவே நாம் வலியுறுத்தியிருந்தோம்.

ஆனால், அதனை திமுக அரசு காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அதனால்தான் இந்த விவகாரம் மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகாவது, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சினையில் திமுக அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பிஹார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை எனவும் சொல்லி சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவதூறாக பரவி வருகிறது. இந்நிலையில், வட மாநிலத் தொழிலாளர்கள், 0421-22-3313, 9498101300, 9498101320 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. > வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பினால் 7 ஆண்டு வரை சிறை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x