Published : 04 Mar 2023 06:18 AM
Last Updated : 04 Mar 2023 06:18 AM
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ்.இளங்கோவன், சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் நேற்று காலைகாங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அப்போது தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் அவரை வரவேற்றனர்.
தொடர்ந்து, கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்களிடம் வாழ்த்துபெற்றார். கட்சியின் மாநில துணைத்தலைவர்கள் ஆ.கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, முருகானந்தம், மாநில எஸ்சி அணித் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர், கே.எஸ்.அழகிரி, உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் அண்ணா அறிவாலயம் சென்று, முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி,‘‘இளங்கோவன் மாபெரும் வெற்றிபெற்றுள்ளார். திமுக தலைமையிலான இந்தக் கூட்டணியின் அமோக வெற்றியானது, இரண்டாண்டு கால ஆட்சிக்கு கிடைத்துள்ள நற்சான்று. மேலும், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தமிழகத்தில் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வரின் அயராத உழைப்பு, தேர்தலில் அவர் காட்டியஆர்வம் ஆகியவை பெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. எங்கள் கூட்டணியில் நாங்கள் தெளிவாக இருந்தோம். ஆனால், அதிமுகவினர் சில இடங்களில் மோடி படத்தைப் பயன்படுத்தினர், சில இடங்களில் பாஜக கொடியை பயன்படுத்துவதை தவிர்த்தனர்’’ என்றார்.
ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறும்போது, ‘‘முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். பேரவைத்தலைவர் அறிவிப்புக்குப் பின் எம்எல்ஏவாக பதவியேற்பேன், நான் முந்தைய காலகட்டத்தில் தவறாக சில கருத்துகளை தெரிவித்திருக்கலாம். அப்போதைய அரசியல் சூழலில் அவ்வாறு கூறியிருக்கலாம். அது தவறுஎன்று தெரிந்தால் திருத்திக் கொள்வது சகஜம்தான். சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதில் மாற்றம் தேவையில்லை என்று நினைக்கிறேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT