Published : 04 Mar 2023 07:21 AM
Last Updated : 04 Mar 2023 07:21 AM
மதுரை: திருச்சி குமாரவயலூர் கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் 2 பேரை அர்ச்சகர்களாக நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் ஜெயபாலன், பிரபு ஆகியோர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களின் நியமனத்தை ரத்து செய்து, கோயிலில் நீண்ட நாட்களாக பணிபுரியும் தங்களை அர்ச்சகர்களாக நியமிக்கக்கோரி கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜெயபாலன், பிரபு தரப்பு, "நாங்கள் 2021-ல் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டோம். இந்த வழக்கு 2022 செப்டம்பரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாமதமாக வழக்கு தொடரப்பட்டுள்ளதால், விசாரணைக்கு ஏற்கக் கூடாது" என்றனர்.
‘காமிக ஆகமம்’ - இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ‘காமிக ஆகம’ விதிப்படி நடைபெறும் கோயிலாகும். இந்த கோயிலில் ஆதி சைவர்கள், சிவாச்சாரியார்கள், குருக்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க முடியும். இந்த ஆகம விதியை பின்பற்றும் கோயில்களில் பிராமணர்களில் ஒரு பிரிவினரே கருவறைக்குள் நுழைய முடியாது.
எஸ்.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டும் தகுதியிழப்பு செய்யப்பட்டிருந்தால் அதை அரசியலமைப்பு சட்ட விரோதம் எனச் சொல்லலாம். இங்கு அப்படியில்லை. அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுஉள்ள 2 பேரும், ஆதி சைவர்கள், சிவாச்சாரியார்கள், குருக்கள் இல்லை. இதனால் அவர்களை ‘காமிக ஆகம’ கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்க முடியாது. அவர்களின் நியமனம் ரத்து செய்யப்படுகிறது.
மனுதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக அர்ச்சகர்களாக கோயிலில் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களை கோயில் அறங்காவலர் குழு முறையாக நியமிக்கவில்லை. தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோயில்களில் அர்ச்சகர்கள் சம்பளம் வாங்காமல் பணிபுரிந்து வருகின்றனர். அர்ச்சகர்கள் நியமனத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.
மனுதாரர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்வது தொடர்பாக கோயில் அறங்காவலர் குழு 8 வாரங்களில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT