Last Updated : 04 Mar, 2023 06:15 AM

 

Published : 04 Mar 2023 06:15 AM
Last Updated : 04 Mar 2023 06:15 AM

கிருஷ்ணகிரி | வேலம்பட்டி அருகே தொட்டி பாலம் நீட்டிப்பு பணிக்கு ரூ.2.21 கோடி - 10 ஆண்டாக காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி: பாளேகுளி முதல் சந்தூர் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் வேலம்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள தொட்டி பாலம் 400 மீட்டர் நீட்டிக்க, ரூ.2.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து கால்வாய் மூலம் பாளேகுளி ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இந்த ஏரியில் இருந்து சந்தூர் ஏரி வரை உள்ள 28 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு கால்வாய் அமைக்கப்பட்டது.

இதன் மொத்த தூரம் 13.8 கி.மீ. இக்கால்வாய் திட்டம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன் பெறுகிறது. 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து, குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

10 ஆண்டு கோரிக்கை: இந்நிலையில், இக்கால்வாய் தண்ணீர் கடந்து செல்லும் பகுதியில் வேலம்பட்டி கிராமத்தில் 300 மீட்டருக்கு தொட்டி பாலம் 12 அடி உயரத்தில், 4 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தொட்டி பாலத்தின் முன்பும், பின்பும் 200 மீட்டர் தூரத்துக்கு மண் கால்வாய் உள்ளது. இதனால், தண்ணீர் செல்லும்போது இவ்விடத்தில் நீர் கசிவு ஏற்படுகிறது.

இதேபோல், எலிகள் துளையிடுவதாலும் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்வது அடிக்கடி தடைபடுகிறது. எனவே, தொட்டி பாலத்தின் இருபுறமும் நீட்டிக்க வேண்டும் என 10 ஆண்டுகளாக விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த தொட்டி பாலம் நீட்டிப்பு பணிக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீர் கசிவு இருக்காது: இதுகுறித்து பொதுப் பணித்துறை அலுவலர்கள் கூறும்போது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வேலம்பட்டியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தொட்டிப் பாலத்தின் முன்பும், பின்பும் 200 மீட்டர் நீட்டிக்கப்படுகிறது. இதற்காக அரசு ரூ.2.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதால், விரைவில் தொட்டிப்பாலம் நீட்டிக்கும் பணிகள் தொடங்கும். இக்கால்வாய் தண்ணீர் திறக்கப்படும் காலங்களில், நீர்கசிவு இல்லாமல் ஏரிகளுக்கு தண்ணீர் சீராக செல்லும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x