Last Updated : 04 Mar, 2023 06:14 AM

 

Published : 04 Mar 2023 06:14 AM
Last Updated : 04 Mar 2023 06:14 AM

அருப்புக்கோட்டை | பருத்தி விலை கடும் வீழ்ச்சி: கிலோ ரூ.55-க்கு விற்பதால் வேதனை

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டத்தில் பருத்தி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.55-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கடும் நஷ்டமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, திருச்சுழி, ஆவியூர், உலகனேரி, கடம்பங்குளம், குரண்டி, மாங்குளம், உப்பிலிகுண்டு, தரகனேந்தல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப் பட்டுள்ளது.

4 மாத பயிரான பருத்தி சாகுபடிக்கு விதை, களையெடுப்பு, பூச்சி மருந்து, உரம், வேலையாள் கூலி என ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. கடந்த ஆண்டு நூல் விலை உயர்வு காரணமாக பருத்தி பஞ்சுக்கான தேவை அதிகரித்தது.

பருத்தி கிலோ ரூ.115 என மிக அதிக விலைக்கு விற்பனையானதால் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பலர் பருத்தி சாகுபடியை மேற்கொண்டனர்.

அந்த பருத்திச் செடிகள் தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளன. பல இடங்களில் அறுவடைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பருத்தி விலை ரூ.55 எனப் பாதியாக குறைந்துவிட்டது.

வெளிநாடுகளிலிருந்து பருத்தி இறக்குமதி அதிகரித்துள்ளதன் காரணமாக உள்நாட்டில் உற்பத்தியாகும் பருத்திக்கு போதிய விலை கிடைக்க வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டமடைந் துள்ளனர்.

இதுகுறித்து திருச்சுழி பகுதி விவசாயிகள் கூறுகையில், பருத்திக்கான தேவை அதிகமாக இருந்ததாலும், அதிக விலை கிடைத்ததாலும் ஆர்வத்துடன் பருத்தி சாகுபடி செய்தோம். பருத்தி குறைந்தபட்சம் கிலோ ரூ.80-க்கு விற்றால்தான் எங்களுக்கு கட்டுபடியாகும். ஆனால், தற்போது ரூ.50 முதல் ரூ.55 வரை மட்டுமே விலை கிடைக்கிறது.

சில இடங்களில் பூச்சித் தாக்குதலால் பருத்தி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் பருத்தி சாகுபடி செய்தவர்கள் அனைவரும் கடும் பாதிப்படைந்துள்ளோம் என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x