Published : 03 Mar 2023 11:32 PM
Last Updated : 03 Mar 2023 11:32 PM

மதுரை மாநகராட்சிக்கு ரூ.5.58 கோடி வாடகை பாக்கி: 156 கடைகளுக்கு அதிரடியாக ‘பூட்டு’

மதுரை மாநகராட்சி | கோப்புப்படம்

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு ரூ.5.58 கோடி வரி பாக்கி வைத்திருந்த 156 கடைகளை அதிகாரிகள் அதிரடியாக பூட்டி ‘சீல்’ வைத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பெரிய நிறுவனங்கள், மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சொத்து வரி, பாதாள சாக்கடை கட்டணம், குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகை வசூல் செய்யும் பணிகள் தற்போது துரிதமாக நடக்கிறது. மாநகராட்சி வருவாய் பிரிவின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு 100 வார்டுகளிலும் வசூல் செய்யும் பணி நடக்கிறது.

மதுரை மாநகராட்சி 3வது மண்டலம் 76 வது வார்டு மேலவாசல் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 156 லாரி நிலைய பழைய இரும்புக்கடைகள் வாடகை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இக்கடைகளுக்கு ரூ.5 கோடியே 58 லட்சம் வாடகை மாநகராட்சிக்கு செலுத்தப்படாமல் நிலுவையாக இருந்தது. மேற்கண்ட கடைகளுக்கு வாடகை தொகையை செலுத்த கோரி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியும், நேரில் சென்று வரி செலுத்தும்படி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆனாலும், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகையினை கடைகாரர்கள் இதுநாள் வரை செலுத்தப்படவில்லை. அதனால், இன்று மாநகராட்சி வருவாய்துறை அதிகாரிகள் அங்கு சென்று அந்த கடைகளுக்கு ‘சீல்’ வைத்து பூட்டினர். இச்சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாபாரிகள், ஆளும்கட்சி பிரமுகர்கள் பின்னணியில் வந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடை வாடகையை செலுத்துவதாகவும், பூட்டை எடுத்துவிடுமாறும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அதிகாரிகள், வாடகை செலுத்தினால் மட்டுமே பூட்டு திறக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x