Published : 03 Mar 2023 09:12 PM
Last Updated : 03 Mar 2023 09:12 PM
புதுடெல்லி: உளவுத் துறையின் அறிக்கைகளை புறக்கணித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு கேட்கும் இடங்களில் எல்லாம் பேரணி நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு நாடிய நிலையில் 6 இடங்களைத் தவிர 44 இடங்களில் பாதுகாப்போடு உள்அரங்கு கூட்டமாக நடத்துவதற்கு உயர் நீதிமன்ற தனி நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும், ஒழுக்கத்தை கடைபிடித்து அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தவும், பிறரை தூண்டும் வகையில் பேரணி நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். அமைதியான முறையில் அணிவகுப்பு பேரணி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, உளவுத் துறை தகவல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களின் அடிப்படையில்தான் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும். ஆனால், இதை எதையும் கவனத்தில் கொள்ளாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு அவர்கள் விருப்பப்பட்ட கூடிய இடங்களில் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதனை ஏற்க முடியாது. பேரணியை அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுக்கக் கூடிய முழு அதிகாரமும் அரசுக்கு உள்ளது. பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கவில்லை. மாநிலத்தில் நிலவும் நிலைமையை கவனத்தில் கொண்டு சுற்றுச்சுவருடன் கூடிய அரங்குகள் உள்ளிட்ட இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இது ஏதோ ஒரு அமைப்பு சார்ந்த பிரச்சினை கிடையாது ஒட்டு மொத்த மாநிலம் சார்ந்த விவகாரம். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு என்பது மிக முக்கியம். உளவுத் துறையின் அறிக்கைகளை புறக்கணித்துவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு கேட்கும் இடங்களிலெல்லாம் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கி விட முடியாது" என்று வாதிட்டார்.
அப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, “தமிழ்நாடு அரசு ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. மத்திய அரசுக்கு எதிராக ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு, தங்கள் தரப்பு பேரணியை மட்டும் தடுத்து நிறுத்த பார்க்கிறது. மேலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஒன்றும் கிடையாது. உண்மையின் பாப்புலர் ப்ஃரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. எனவே அந்த அமைப்பால் எங்களது பேரணிக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என அரசு நினைக்கிறது. அப்படியெனில் தமிழ்நாடு அரசு எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமே தவிர ஆர்எஸ்எஸ் பேரணியை நிறுத்தக்கூடாது" என வாதிட்டார்.
அப்போது தமிழக அரசு தரப்பில், "இந்த வழக்கை 10 நாட்களுக்கு பின் விசாரிக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில், பேரணி தொடர்பாக ஒரு விரிவான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்கிறோம். அதன்படி நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். பேரணியை எங்கெல்லாம் அனுமதிக்க முடியும், என்னென்ன கட்டுப்பாடுகள் எல்லாம் விதிக்க வேண்டியிருக்கிறது உள்ளிட்ட அனைத்து விபரங்களுடன் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக, வழக்கு விசாரணையின்போது, வரும் 5-ம் தேதி நடைபெற இருந்த பேரணியை ஒத்திவைப்பதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT