Published : 03 Mar 2023 08:39 PM
Last Updated : 03 Mar 2023 08:39 PM
மதுரை: முதல்வர் ஸ்டாலின் வரும் 5-ம் தேதி மதுரைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதால் இதுவரை புழுதியும், குண்டும் குழியுமாக கிடந்த சாலைகளை திடீரென்று தூய்மைப்படுத்தி சாலைகளை சீரமைக்கும் பணியில் இரவு - பகலாக தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதனால், மதுரை மாநகரம் தற்காலிகமாக ‘ஸ்மார்ட்’ ஆகி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் மண்டல ஆய்வுக் கூட்டம் மற்றும் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக மதுரைக்கு 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறார். அவர் தொடர்ந்து 2 நாட்கள் மதுரையில் இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் வருகைக்கான ஏற்பாடுகளில் மாவட்ட அதிகாரிகள் முதல் மாநகராட்சி அதிகாரிகள் வரை சுறுசுறுப்படைந்துள்ளனர். மதுரை மாநகரில் இதுவரை நகரின் பெரும்பாலான சாலைகள் அனைத்தும் மண், தூசி படிந்து கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டன.
திரும்பிய பக்கமெல்லாம் சாலைகளில் நெரிசல் உள்ளன. மக்கள் பீக் அவர் மட்டுமில்லாது சாதாரண நாட்களிலும் சாலைகளை கடக்க முடியாமல் திண்டாடுகின்றனர். அதேநேரத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் செல்லும் சாலைகளை மட்டும் தினசரி அடையாளம் கண்டு போலீஸார் அந்த சாலைகளை மட்டும் போக்குரவத்து நெரிசலை ஒழுங்குப்படுத்துகின்றனர். தொழிலாளர்களை கொண்டு தூய்மை செய்து பளிச்சென்று வைக்கின்றனர். அதனால், மதுரை மாநகர சாலைகளில் மக்கள் அன்றாடும் படும் துயரங்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தெரிவதில்லை.
இந்நிலையில், மதுரைக்கு முதல்வர் வருவதால் கடந்த 2 நாட்களாக நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் குண்டும் குழியுமான சாலைகள் அவசரம் அவசரமாக சீரைமக்கப்படுகின்றனர். சாலைகளில் உள்ள பள்ளங்களில் கற்கள் மண்ணை கொட்டி நிரப்பி தற்காலிகமாக தார் ஊற்றி மராமத்துப் பணி பார்க்கப்படுகிறது. மேலும், சாலைகளில் இதுவரை படிந்து காணப்பட்ட மண், தூசிகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அள்ளி தூய்மைப்படுத்துகின்றனர்.
முக்கிய சாலைகளில் மண் தூசி அப்புறப்படுத்தும் வாகனங்களை கொண்டு தூய்மைப்படுத்தப்படுகிறது. சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் சுவர்களை தொழிலாளர்கள் சுத்தம் செய்து, வெள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்றுமாவடி ரவுண்டானா பெயிண்டிங் அடித்து புதுப்பொலிவுப்படுத்தப்படுகிறது. மீதமுள்ள நாட்களில் மற்ற ரவுண்டானாக்களும் புதுப்பொலிவுப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மூன்று மாவடி முதல் ஆணையூர் வரை செல்லும்சாலையில் காணப்பட்ட குண்டும், குழிகளை ஜேசிபி இயந்திரங்களை கொண்டு சீரமைக்கும் பணி தொடங்கியிருக்கிறது. மதுரை கே.கே.நகர் சாலைலும் பழுதுப்பார்க்கப்பட்டு தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது. அதனால், ஏற்கெனவே ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டதாலே ஸ்மார்ட் ஆகாத மதுரை மாநகரம், தற்போது அதிகாரிகளின் முதல்வர் வருகை ஏற்பட்டால் மதுரை தற்காலிகமாக ஸ்மார்ட் ஆக மாறி வருகிறது. முதல்வர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சென்றதும், பழையபடி மதுரை சாலைகள் பராமரிப்பு இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலை தொடரும் நிலை உருவாகும் என்ற கவலையும் உள்ளூர் மக்களிடம் நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT