Published : 03 Mar 2023 07:31 PM
Last Updated : 03 Mar 2023 07:31 PM
கோவை: கோவை மாநகராட்சிப் பள்ளிக்குள் புகுந்த 6 அடி நீள நாகப் பாம்பிடம் கடிபட்டும், அப்பாம்பை பிடித்து குழந்தைகளின் உயிரை இஎஸ்ஐ மருத்துவமனைப் பணியாளர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
கோவை போத்தனூரை அடுத்த வெள்ளலூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (48) . சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தோட்ட பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி பணிக்கு செல்லும்போது, சிங்காநல்லூர் வரதராஜபுரம், மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் 6 அடி நீள நாகப் பாம்பு ஒன்று புகுந்துவிட்டதாக அங்குள்ள தூய்மைப் பணியாளர் ஒருவர் பாலசுப்பிரணியத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பள்ளியில் இருந்த அட்டைப் பெட்டிக்குள் பாம்பு இருந்துள்ளது. மாணவர்கள் வழிபாட்டு கூட்டம் முடிந்து வரும் நேரத்தில், அட்டைப்பெட்டியில் இருந்து வெளியேறிய பாம்பு, மாணவர்கள் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளது. அந்த நேரத்தில் பள்ளி சென்றடைந்த பாலசுப்பிரமணியம், குழந்தைகளை பாம்பு கடித்துவிடமால் இருக்க அதை உடனடியாக பிடிக்க முயன்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக கை வரலில் பாம்பு கொத்தியுள்ளது. இருப்பினும், அந்தப் பாம்பை பிடித்த பாலசுப்பிரமணியம், ஒரு பெட்டியில் அடைத்து வைத்தார். பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு விஷ முறிவு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து பாலசுப்பிரமணியம் நலமுடன் வீடு திரும்பினார்.
தனது உயிரை பொருட்படுத்தாமல் பாம்பை உடனடியாக பிடித்து குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய அவருக்கு இஎஸ்ஐ மருத்துவமனை டீன், இருப்பிட மருத்துவ அலுவலர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர். இதற்கு முன்பு, இஎஸ்ஐ மருத்துவமனையில் பல பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து பாலசுப்பிரமணியன் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்துள்ளதாக மருத்துவமனை அலுவலர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT