Published : 03 Mar 2023 07:01 PM
Last Updated : 03 Mar 2023 07:01 PM

தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: அரசு விளக்கம்

திருச்சியில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள்

சென்னை: "தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. அவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்" என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வந்து அதில் பல மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள். அதேபோல், மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள்.

அந்தத் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அனைத்து நிறுவனங்களிலும் தமிழக அரசின் தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்திற்கு வருபவர்களை நேசக் கரம் கொண்டு வரவேற்பதுதான் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் நடைமுறை. விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற தமிழக மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழக அரசும் இந்த உடலுழைப்புத் தொழிலாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால், இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மிகவும் மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் சில இடங்களில் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை தமிழகத்தில் இருக்கும் வட மாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள்.

தொழில் அமைதிக்கும், சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர்பெற்று விளங்கும் தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x