Last Updated : 03 Mar, 2023 06:40 PM

 

Published : 03 Mar 2023 06:40 PM
Last Updated : 03 Mar 2023 06:40 PM

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமாக இருப்பது 4 லட்சம் ஏக்கர் - இலவச குடியிருப்பு இன்றி 30,000 ஊழியர்கள் கவலை

சேலம்: இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமாக மாநிலம் முழுவதும் 4 லட்சம் ஏக்கர் நிலம் இருந்தும், கோயில் அலுவலர்கள், அர்ச்சகர்களுக்கு இலவச குடியிருப்பு கட்டி கொடுக்க வேண்டிய நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், 30 ஆயிரம் பணியாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழக இந்து சமய அறநிலயத் துறையின் கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 38 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில் மாதம் ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமாக வருமானம் உள்ள ஏ கிரேடு கோயில்கள் 4 ஆயிரம் வரை உள்ளன. அதேபோல, 30 ஆயிரம் கோயில்கள் வருமானம் இல்லாத நிலையில், தத்தளித்து வருகிறது. தமிழக அரசு வங்கியில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்துள்ள 15 ஆயிரம் கோயில்களுக்கு, மாதம் தோறும் கிடைக்கும் ரூ.800 வட்டி தொகையில் ஒரு கால பூஜை நடத்தப்படுகிறது. இக்கோயிலில் பணியாற்றும் 15 ஆயிரம் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகையாக ரூ.1000 அரசு வழங்கி வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலர்கள், அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள், சிவாச்சாரியார்கள் என 35 ஆயிரம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர். இதில் ஏ கிரேடு கோயில்களில் பணியாற்றுபவர்களுக்கு கோயில் இடத்தில் குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 30 ஆயிரம் கோயில்களில் ஏழ்மை நிலையில் பணியாற்றி வரும் அலுவலர்கள், அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்டோருக்கு, கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இலவசமாக வீடுகட்டி கொடுக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை அரசு நிறைவேற்றி கொடுக்காததால் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக 4 லட்சம் ஏக்கர் நிலம் உள்ள நிலையில், கோயில் பணியாளர்களின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு குடியிருப்பு கட்டி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறும்போது, ''இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமாக நஞ்சை, புஞ்சை என 4 லட்சம் ஏக்கர் நிலம் மாநிலம் முழுவதும் உள்ளது. இதில் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் அதிக வருமானம் உள்ள பெரிய கோயில்களில் பணியாற்றும் அலுவலர்கள், அர்ச்சகர்களுக்கு குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

சாதாரண கோயில்களில் பணியாற்றுபவர்களுக்கு, கோயிலுக்கு சொந்தமாக நிலம் இருந்து குடியிருப்பு இல்லாத நிலையே உள்ளது. பிற அரசு துறைக்கு தேவையான அலுவலக கட்டிடங்களுக்கு தேவையான நிலத்திற்காக, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, வருவாய் இல்லாமலும், குறைந்த வருவாய் உள்ள பணியாளர்களுக்கு அரசு இலவசமாக குடியிருப்பு கட்டி கொடுத்தால், அவர்களின் வறுமை நிலையை ஓரளவு சமாளிக்க ஏதுவாக அமையும்'' என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வாசு கூறும்போது, ''திருச்சி திருவரங்கம் கோயிலில் ரூ.2.50 கோடியில் பசுமடம் அமைக்கவும், 18 கோயில்களில் ரூ.1 கோடியில் யானைகளுக்கு புதிய குளியல் தொட்டிகள் அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், கோயிலை நம்பி ஜீவாதாரம் செய்து வரும் வருவாய் இல்லாத 30 ஆயிரம் கோயில் பணியாளர்களுக்கு, இலவச குடியிருப்பு கட்டி கொடுக்க வேண்டி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும், அரசு செவி சாய்க்க மறுத்து வருவது வேதனையளிக்கிறது. தற்போதுள்ள திமுக மாடல் அரசு அர்ச்சகர்கள், பூசாரிகள், கோயில் பணியாளர்களின் குடியிருப்பு கனவை நிறைவேற்றிட வேண்டும் என காத்திருக்கிறோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x