Published : 03 Mar 2023 05:13 PM
Last Updated : 03 Mar 2023 05:13 PM
திருவண்ணாமலை: மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “ திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணி அமைந்தால், அந்தக் கூட்டணியும் கரை சேராது, பாஜகவையும் வீழ்த்த முடியாது, நாட்டுக்கும் பாதுகாப்பு இல்லை என பாஜக எதிர்ப்பு சக்திகளுக்கு மிக தெளிவாக உணர்த்தி உள்ளார். தேர்தல் நிலைப்பாடாக இல்லாமல் நாட்டையும், மக்களையும், அரசியல் அமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பதற்கான கொள்கை பிரகடனமாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், தனித்து போட்டியிடுவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஆகவே, இந்தியா முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களை நேரில் சந்தித்து, தனித்துப் போட்டியிடுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூற வேண்டும். பாஜக எதிர்ப்பு சக்திகள் ஓரணியில் திரண்டு வீழ்த்த வேண்டும் என்பதை வெளிப்படையாக பேச வேண்டும் என விசிக வேண்டுகோள் விடுகிறது.
திமுகவுடன் உரசலா? - திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே உரசல், முரண்பாடு மற்றும் இடைவெளியை உருவாக்க, சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர். இதற்கு வாய்ப்பு இல்லை. கனவு காணும் சக்திகள் ஏமாற்றம் அடைவார்கள். கூட்டணி தொடர்பான நிலைபாடு, ஆட்சி நிர்வாகத்தில் ஏற்படுகின்ற சிறிய பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது என விசிகவுக்கும் தெளிவு இருக்கிறது, திமுகவுக்கும் புரிதல் இருக்கிறது. திருமாவளவன் உள்நோக்கத்துடன் பேசுகிறார், முதல்வரை பாமக தலைவர் சந்தித்தால் அச்சப்படுகிறேன், கலக்கமடைகிறேன் எனப் பேசுகின்றனர். இது கற்பனையான கருத்து. முதல்வர் என்ற முறையில் யாரும் யாரையும் சந்திக்கலாம், பாஜகவினரும் சந்திக்கலாம். பிரதமர் என்ற முறையில், மோடியை நானும் சந்திக்கலாம். ஒருவரையொருவர் சந்திப்பதால் கூட்டணி வைக்க போகிறோம் என்பதல்ல.
திமுக கூட்டணியில் விசிக உறுதியாக இருக்கிறது. அகில இந்திய அளவில் அனைத்து எதிர் கட்சிகளையும் ஒருங்கிணைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும், முன்மொழிய வேண்டும், இதற்கான முயற்சிகளை முன்னின்று செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே எந்த சக்தியாலும் இடைவெளியை ஏற்படுத்த முடியாது.
பாமக என்ற சாதி வெறி கட்சியுடனும், பாஜக என்ற மதவெறி கட்சியுடன், எந்த காலத்திலும் கூட்டணி இல்லை. அவர்கள் இடம்பெறுகின்ற அணியில் இருக்க மாட்டோம் என விசிக கொள்கை முடிவு எடுத்துள்ளது. இது திமுகவுக்கு மறைமுகமாக சொல்கிறோம். அதிமுகவுக்கு மறைமுக சைகை காட்டுகிறோம் என்றால், அது உங்களின் யூகம். எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. கட்சியின் ஆதாயத்துக்காக மக்களின் உணர்வுகளை தூண்டுகின்றனர்.
ஒரு சமூகத்தின் நலனுக்கு பாடுபடுவது தவறில்லை. ஒரு சமூகத்தின் மக்களின் உணர்வுகளை கட்சியின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் தூண்டிவிடுவது, அதையே பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் மத வெறியாகவும், சாதி வெறியாகவும் மாறுகிறது. இதனால் பகை, மோதல், முரண்பாடு உருவாகிறது. மோதல் உருவானால் நல்லது என கருதுகின்ற கட்சிகள்தான் பாமக, பாஜக. அப்படிப்பட்ட யுக்திகளைதான் அவர்கள் கையாளுகின்றனர். வடக்கில் முஸ்லிம் வெறுப்பை பயன்படுத்தி வென்றார்கள், தருமபுரியில் தலித் வெறுப்பை பயன்படுத்தி வென்றார்கள். இவர்கள் இரண்டு பேரும் ஓரே வழியில் பயணிப்பவர்கள். நாங்கள், எங்கள் கட்சி சார்ந்து ஒரு கொள்கை முடிவு எடுத்துள்ளோம். இது மக்களுக்கான செய்தி, வேறு யாருக்கும் இல்லை.
அதானி, அம்பானிக்காக ஆட்சி: சட்டபூர்வமாக அரசியல் கட்சிகள் அன்பளிப்பு என்ற பெயரில் வெள்ளை பணமாகவே பெற்று கொள்ளலாம் என்ற வரையறையை பாஜக அரசு உருவாக்கி கொண்டது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்தும், பாஜக அரசு பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாயை வசூலித்து வருகின்றனர். இது வெள்ளை பணம், கணக்கில் வரும். கணக்கில் வராத பணம் என்பது தனி. ஆட்சி அதிகாரம் உள்ளதால் கார்ப்பரேட் நிறுவனங்களை, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பாஜக கட்சிக்காக யாரிடம் இருந்து பணத்தை பெற்றார்களோ, அவர்களுக்குதான் ஒப்பந்த பணிகளை வழங்குகின்றனர்.
அதானி, அம்பானிக்கு இந்திய அளவில் ஒப்பந்த பணிகளை மோடி அரசு வழங்குகிறது. இவர்கள் 2 பேர்தான், 8 ஆண்டு பாஜக ஆட்சியில் வளர்ந்துள்ளனர். நாடும், நாட்டு மக்களும் வளர்ச்சி அடையவில்லை. இந்திய நாடு வல்லரசாகவில்லை. பொது சொத்துகள் சூறையாடப்பட்டு, தனியாருக்கு விற்கப்படுகிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. காஸ் சிலிண்டர் விலையும் மீண்டும் உயர்த்தி உள்ளனர். மக்களுக்கான ஆட்சி நிர்வாகத்தை நடத்தாமல் ஆதானி மற்றும் அம்பானிக்காக ஆட்சி நிர்வாகத்தை நடத்துகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிதியை வசூலித்து தேர்தலை சந்திக்கின்றனர்” என்று திருமாவளவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT