Published : 03 Mar 2023 04:27 PM
Last Updated : 03 Mar 2023 04:27 PM

“இனி மரணம் அடையும் வேட்பாளரின் கட்சியைச் சேர்ந்தவரையே எம்எல்ஏவாக அறிவிப்பீர்” - விஜயகாந்த் காட்டம்

விஜயகாந்த் | கோப்புப்படம்

சென்னை: "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தல் அல்ல. இனிமேல் நடைபெறும் இடைத்தேர்தல்களில் எந்தக் கட்சியின் வேட்பாளர் மரணம் அடைகிறாரோ, அந்தக் கட்சியில் உள்ள ஒரு நபரையே எம்எல்ஏவாக அறிவித்துவிடுங்கள். எதற்காக இந்தக் கண்துடைப்பு நாடகம்?" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாள் வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் பணமழை பொழிந்தது. ஆளும்கட்சியும், ஆண்ட கட்சியும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததோடு, குக்கர், கொலுசு, குங்குமச்சிமிழ், வேட்டி, சேலை, இன்ப சுற்றுலா, தினந்தோறும் கறி விருந்து வழங்கியதாக வீடியோ ஆதாரத்துடன் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மேலும், எந்தத் தொகுதியிலும் நடைபெறாத வகையில் வாக்காளர்களை காலை முதல் மாலை வரை பட்டறையில் அடைத்து வைத்த கொடூரமும் அரங்கேறியது.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால், அந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற பணப்பட்டுவாடாவை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் கைப்பாவையாக செயல்பட்டது. இதன்மூலம் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டது. மேலும், 2009-ல் திமுக உருவாக்கிய திருமங்கலம் ஃபார்முலாவை 14 ஆண்டுகளுக்குப் பின், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவே முறியடித்துவிட்டது. ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தி ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக முறைகேடாக வெற்றி பெற்றிருப்பது புதிதல்ல.

தற்போது மாபெரும் வெற்றி பெற்றுவிட்டதாக மார்தட்டிக் கொள்ளும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், மிகப்பெரிய தொகையை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இது ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தல் அல்ல.

இனிமேல் நடைபெறும் இடைத்தேர்தல்களில் எந்த கட்சியின் வேட்பாளர் மரணம் அடைகிறாரோ, அந்தக் கட்சியில் உள்ள ஒரு நபரையே எம்எல்ஏவாக அறிவித்துவிடுங்கள். எதற்காக இந்த கண்துடைப்பு நாடகம். பணபலம், அதிகார பலம், ஆட்சி பலத்தை எதிர்த்து நமக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்குகளும் ஆயிரம் மடங்கு சமம். இது உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்த வாக்குகள்.

மேலும், இடைத்தேர்தலில் இரவு பகல் என பாராமல் உழைத்த கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகளை கண்டு நமது கட்சி நிர்வாகிகள் துவண்டுவிடாதீர்கள், கவலைப்படாதீர்கள். ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து வருங்காலத்தில் இமாலய வெற்றி பெறுவோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தருமமே வெல்லும்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x