Published : 03 Mar 2023 03:23 PM
Last Updated : 03 Mar 2023 03:23 PM
திருவண்ணாமலை: “அதிமுக கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறோம் என கூறி பேரத்தின் வலிமையை கூட்டுவதுதான் பாமகவின் தேர்தல் தந்திரம்” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கூறியுள்ளார். மேலும், “திமுக கூட்டணியில் விசிக உறுதியாக இருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இன்று செய்தியாளர்களிடம், "நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் அமைக்கப்பட்டு வருவது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக கூட்டணியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ளார். அவரது துணிச்சலான முடிவை நெஞ்சார பாராட்டி விசிக வரவேற்கிறது. திமுக முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விசிக உற்ற துணையாக இருக்கும். பாஜக தலைமையிலான சனாதன சக்திகளை, 2024-ல் நடைபெறக் கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்த வேண்டும் என முக ஸ்டாலின் அழுத்தமாக கூறிப்பிட்டுள்ளார்.
தெளிவும், புரிதலும் இருக்கிறது: திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே உரசல், முரண்பாடு மற்றும் இடைவெளியை உருவாக்க, சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர். இதற்கு வாய்ப்பு இல்லை. கனவு காணும் சக்திகள் ஏமாற்றம் அடைவார்கள். கூட்டணி தொடர்பான நிலைபாடு, ஆட்சி நிர்வாகத்தில் ஏற்படுகின்ற சிறிய பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது என விசிகவுக்கும் தெளிவு இருக்கிறது, திமுகவுக்கும் புரிதல் இருக்கிறது. திருமாவளவன் உள்நோக்கத்துடன் பேசுகிறார், முதல்வரை பாமக தலைவர் சந்தித்தால் அச்சப்படுகிறேன், கலக்கமடைகிறேன் எனப் பேசுகின்றனர். கற்பனையான கருத்து. முதல்வர் என்ற முறையில் யாரும் சந்திக்கலாம், பாஜகவினரும் சந்திக்கலாம். பிரதமர் என்ற முறையில், அவரை நானும் சந்திக்கலாம். ஒருவரையொருவர் சந்திப்பதால் கூட்டணி வைக்க போகிறோம் என்பதல்ல.
பாமகவின் கலாச்சாரம்: பாமகவுக்கு ஒரு கலாச்சாரம் உண்டு. கூட்டணியில் இருப்பார்கள், தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, எந்தக் கூட்டணியில் இருந்தார்களோ, அந்தக் கூட்டணியில் இருந்து விலகி இருப்பார்கள். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் 2 அணி தலைவர்களுக்கும் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புவார்கள். நான், இந்தப் பக்கமும் பேச முடியும், அந்தப் பக்கமும் பேச முடியும். ஓரே அணியில் இல்லை என்பதை தெரிவிப்பார்கள். அப்படி இருந்தால் பேர வலிமையை கூட்ட முடியாது. பேரத்தின் வலிமையை கூட்டுவதற்கு, ஒரு சூழ்ச்சி மற்றும் தந்திரத்தின் அடிப்படையில் பாமக செயல்படுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகி இருக்கிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்களிப்பதை தவிர்த்துள்ளனர். அதிமுக கூட்டணியில், நாங்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறோம் என திமுக கருத தேவையில்லை, திமுகவுடனும் பேச தயாராக இருக்கிறோம் என்ற சமிக்கை. திமுகவுடன் பேசுவோம் என அதிமுகவுக்கு சொல்வதுதான் நோக்கம். இரண்டு பக்கமும் கதவுகளை திறந்து வைக்கிறோம் என்ற யுக்தியை கையாளுகின்றனர். திமுகவுடன் பேசிக் கொண்டே அதிமுகவுடன் பேரத்தை முடிப்பது, அதிமுகவுடன் பேசி கொண்டே திமுகவுடன் பேரத்தை முடிப்பது, இதுதான் பாமகவின் தேர்தல் தந்திரம்.
கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம்: திமுக கூட்டணியில் விசிக உறுதியாக இருக்கிறது. அகில இந்திய அளவில் அனைத்து எதிர் கட்சிகளையும் ஒருங்கிணைக்க திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும், முன்மொழிய வேண்டும், இதற்கான முயற்சிகளை முன்னின்று செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே எந்த சக்தியாலும் இடைவெளியை ஏற்படுத்த முடியாது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் என்பது திமுக தலைமையிலான கூட்டணி தொடர வேண்டும் என்ற கருத்தையும் உணர்த்துவதாக நான் நம்புகிறேன். அகில இந்திய அளவில் வழிகாட்ட கூடிய வலிமை பெற வேண்டும் என மாபெரும் வெற்றியை வழங்கி உள்ளனர்.
மேற்கு மாவட்டங்கள் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும், திமுகவுக்கு சாதகமாக இருக்காது என சிலர் கூறிய ஆரூடம், பொய்த்துப் போனது. மேற்கு மாவட்ட அரசியல் வரலாற்றில், திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. விமர்சனங்களை கடந்து, திமுகவை மக்கள் ஏற்று கொண்டுள்ளனர். திமுக கூட்டணி மீதான நன்மதிப்பை, வெற்றி உணர்த்துகிறது. வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
விசிகவுன் கொள்கை முடிவு: பாமக என்ற சாதி வெறி கட்சியுடனும், பாஜக என்ற மதவெறி கட்சியுடன், எந்த காலத்திலும் கூட்டணி இல்லை. அவர்கள் இடம் பெறுகின்ற அணியில் இருக்க மாட்டோம் என விசிக கொள்கை முடிவு எடுத்துள்ளது. இது திமுகவுக்கு மறைமுகமாக சொல்கிறோம். அதிமுகவுக்கு மறைமுக சைகை காட்டுகிறோம் என்றால், அது உங்களின் யூகம். எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. கட்சியின் ஆதாயத்துக்காக மக்களின் உணர்வுகளை தூண்டுகின்றனர்.
ஒரு சமூகத்தின் நலனுக்கு பாடுபடுவது தவறில்லை. ஒரு சமூகத்தின் மக்களின் உணர்வுகளை கட்சியின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் தூண்டிவிடுவது, அதையே பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் மத வெறியாகவும், சாதி வெறியாகவும் மாறுகிறது. இதனால் பகை, மோதல், முரண்பாடு உருவாகிறது.
மோதல் உருவானால் நல்லது என கருதுகின்ற கட்சிகள்தான் பாமக, பாஜக. அப்படிப்பட்ட யுக்திகளைதான் அவர்கள் கையாளுகின்றனர். வடக்கில் முஸ்லிம் வெறுப்பை பயன்படுத்தி வென்றார்கள், தருமபுரியில் தலித் வெறுப்பை பயன்படுத்தி வென்றார்கள். இவர்கள் இரண்டு பேரும் ஓரே வழியில் பயனிப்பவர்கள். நாங்கள், எங்கள் கட்சி சார்ந்து ஒரு கொள்கை முடிவு எடுத்துள்ளோம். இது மக்களுக்கான செய்தி, வேறு யாருக்கும் இல்லை" என்று திருமாவளவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT