Published : 03 Mar 2023 02:57 PM
Last Updated : 03 Mar 2023 02:57 PM

சாதிப் பிரிவுகளை அறிந்து உர மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிடுகிறதா? - அன்புமணி கண்டனம்

கோப்புப்படம்

சென்னை: "உழவுத் தொழில் புனிதமானது; அனைவருக்கும் பொதுவானது. அதற்கான உர மானியம் பெறும் உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு. எனவே, உரம் வாங்கும் உழவர்களின் சாதிப் பிரிவை கோரும் கூறை விற்பனைக் கருவியின் மென் பொருளில் இருந்து நீக்க மத்திய அரசு நீக்க வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மானியத்துடன் கூடிய உரங்களை உழவர்கள் வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத் ( பொது/ஓபிசி/எஸ்.சி/எஸ்.டி) தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று நடுவண் உரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உர விற்பனைக் கருவியின் மென்பொருளில் இதற்கான வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

உழவுத் தொழில் சாதியின் அடிப்படையில் நடைபெறவில்லை. உர மானியமும் சாதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது உர மானியம் வழங்குவதற்கான சாதிப் பிரிவுகளை கோருவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. நடுவண் அரசின் இந்த விதி உழவர்களை காயப்படுத்தியுள்ளது.

உர மானியம் பெறுவோரின் சாதிப் பிரிவுகளை அறிந்து அவற்றின் அடிப்படையில் உர மானியம் வழங்க நடுவண் அரசு திட்டமிட்டிருக்கிறதோ என்ற ஐயம் உழவர்கள் நடுவே ஏற்பட்டிருக்கிறது. உழவர்களின் இந்த ஐயத்தை உடனடியாக போக்க வேண்டியது நடுவண் அரசின் கடமை.

உழவுத் தொழில் புனிதமானது; அனைவருக்கும் பொதுவானது. அதற்கான உர மானியம் பெறும் உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு. எனவே, உரம் வாங்கும் உழவர்களின் சாதிப் பிரிவை கோரும் கூறை விற்பனைக் கருவியின் மென் பொருளில் இருந்து நீக்க நடுவண் அரசு நீக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x