Published : 03 Mar 2023 02:32 PM
Last Updated : 03 Mar 2023 02:32 PM

இபிஎஸ் தலைமை இன்றி அனைவரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே திமுகவை வெல்ல முடியும்: தினகரன் கருத்து

மதுரை: எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமை இன்றி அனைவரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே திமுகவை வெற்றிப்பெற முடியும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

மதுரை கோச்சடையில் உள்ள தனியார் ஹோட்டலில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''இடைத்தேர்தல் முடிவு அனைவருக்கும் தெரிந்த முடிவு. மருங்காபுரி மற்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மட்டும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்றபடி அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் ஆளும் கட்சிகளே தான் வெற்றி பெற்றுள்ளன. மக்கள் ஆளும் கட்சிக்கு ஓட்டுப் போட்டால் தொகுதிக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் வாக்களிப்பது இயற்கையாக நடக்கக் கூடியது.

ஆனால், திமுக மீது தற்போது மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஸ்டாலின் வார்த்தை ஜாலம்தான் செய்கிறார். இந்த தேர்தல் முடிவு மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்காது என்பது கடந்த காலத்தை பார்த்தாலே தெரியும். 20 மாத ஆட்சியில் மக்கள் எந்த அளவிற்கு வேதனையில் உள்ளார்கள் என்பதை உளவுத் துறை மூலமாக முதலமைச்சருக்கு தெரியும். அதை அறிந்த காரணத்தால்தான் இடைத்தேர்தலில் தெருவுக்கு ஒரு அமைச்சர் என்ற வகையில் வேலை பார்த்தார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு வாக்காளருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக சேர்ந்திருக்கும். அதிகாரத்தையும், பணத்தையும் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி வாங்கப்பட்டது. மக்கள் வழங்கியது அல்ல.

உச்ச நீதிமன்றம் இரட்டை இலை வழங்காவிட்டால் இந்த வாக்கும் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பினருக்கு கிடைத்து இருக்காது. மேற்கு மண்டலமே எங்களது கோட்டை என்று சொன்னார்கள். ஆனால், தற்போது கலகலத்துபோய் உள்ளனர். கே.பழனிசாமி தரப்பும் திமுகவிற்கு இணையாக பணமும் பொருட்செலவும் செய்தும் கூட வெற்றி பெற இயலவில்லை. மோசமான தோல்வியை சந்தித்துள்ளனர். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டபோது ஜெயலலிதா பொதுத்தேர்தலில் புதிய சின்னத்தில் நின்று 28 இடங்களை பெற்றார்.

வருங்காலத்தில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரண்டு திமுக என்ற தீய சக்தி வீழ்த்த வேண்டும். இதற்கு ஒரு சிலரின் சுயநலம் தடையாக இருக்கலாம். அந்த சுயநலம் உடைத்து எறியப்படும். எந்த துரோகம் இழைக்கப்பட்டதிற்காக அதிமுக தொடங்கப்பட்டதோ தற்போது அதே துரோகத்தை கே.பழனிசாமி செய்துள்ளார். இதற்கு காலம் நிச்சயம் நல்ல தீர்ப்பை தரும்.

தேர்தல் தோல்வியால் தொண்டர்கள் கவலையில் உள்ளனர். பழனிச்சாமி பிடியில் அதிமுக இருக்கிற வரைக்கும் எந்த முன்னேற்றமும் கிடையாது. நாங்கள் பழனிச்சாமி தலைமையில் இணைய வாய்ப்பே இல்லை. கே.பழனிச்சாமி தலைமை இல்லாமல், அனைவரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே திமுகவை வெற்றி பெற முடியும்'' என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x