Published : 03 Mar 2023 02:51 PM
Last Updated : 03 Mar 2023 02:51 PM
சென்னை: “தமிழக சட்டப்பேரவையில் அன்று ஏசி இல்லை, இன்று ஏசி உள்ளது” என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கலகலப்புடன் பதில் அளித்தார்.
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கும் நாள் குறித்து சபாநாயகர் அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.
பணநாயகம் வென்றது என்ற அதிமுக வேட்பாளரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர், "வாக்குப்பதிவு தினத்தன்று பேசிய அதிமுக வேட்பாளர், ‘தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் நன்றாக செய்துள்ளது. ஈரோட்டில் எப்போதும் நாகரிகமான அரசியல் இருக்கும். தேர்தல் அமைதியாக நடந்தது. எந்த தவறும் நடைபெறவில்லை’ என்று தெரிவித்தார். தோல்வி அடைந்த பிறகு எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொடுத்ததை பேசியுள்ளார்" என்று தெரிவித்தார்.
34 ஆண்டுகளுக்குப் பின் சட்டப்பேரவைக்கு செல்வதை எப்படி உணருகிறீர்கள் என்ற கேள்விக்கு, "தமிழக சட்டப்பேரவையில் அன்று ஏசி இல்லை, இன்று ஏசி உள்ளது" என்று கலகலப்பாக பதில் அளித்தார்.
திமுக கூட்டணி ரூ.350 கோடி செலவு செய்து போலியான வெற்றியை பெற்றுள்ளது என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுக்கு, “ஜெயக்குமாருக்கு தினசரி கெட்ட கனவு வரும். அதை வெளியே சொல்லிக் கொண்டு உள்ளார். அவர் மீது நிறைய வழக்கு உள்ளது. அதைப் பார்க்கச் சொல்லுங்கள்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT