Published : 03 Mar 2023 06:56 AM
Last Updated : 03 Mar 2023 06:56 AM
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி, 2024 மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், முதல்முறையாக சென்னை வந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நேற்று முன்தினம் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழாவில் அவர் பங்கேற்றார்.
தொடர்ந்து, பெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு நேற்று சென்ற மல்லிகார்ஜுன கார்கே, நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சிலையைத் திறந்து வைத்தார். பின்னர், ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:
ஏறத்தாழ 32 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்புதூரில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை நம் தேசம் இழந்தது. நம் நாட்டைபாதுகாக்க, நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற நாடாக கட்டமைக்க முயன்றவர் ராஜீவ்.
அவரது தலைமையிலான அரசு மேற்கொண்ட நடவடிக்கை, 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு அடித்தளமாக அமைந்தது. அவரது நடவடிக்கையால் மிசோரம், அசாம், பஞ்சாப் மாநிலங்களில் நிலவிய கலவரங்கள் முடிவுக்கு வந்தன. மக்கள் வாக்களிப்பதற்கான உரிமையைப் பெறும் வயதை 21-லிருந்து 18-ஆக குறைத்தார். அவரது ஆட்சியில் அறிவியல், தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் சென்னை திரும்பிய கார்கே, காங்கிரஸ் எஸ்.சி. அணி தேசிய தலைவர் ராஜேஷ் லிலோத்தியா தலைமையில், மாநில எஸ்.சி. அணித் தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது, 2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்" என்றார்.
இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் சு.திருநாவுக்கரசர், கே.வீ.தங்கபாலு, தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் சிரிவெல்ல பிரசாத், மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆ.கோபண்ணா, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, எம்.பி.க்கள் கார்த்தி சிதம்பரம், ஜெயக்குமார், ஜோதிமணி, மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT