Published : 04 Sep 2017 09:20 AM
Last Updated : 04 Sep 2017 09:20 AM
கொசுத் தொல்லை காரணமாக சென்னைவாசிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். ஆறுகளின் முகத்துவாரங்களில் உள்ள மணல்மேட்டை அகற்றாததே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னையில் கூவம், அடையாறு ஆகிய 2 ஆறுகளும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வணிக நோக்கத்துக்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட பக்கிங்காம் கால்வாயும் உள்ளன. இதுதவிர 34 சிறிய, பெரிய கால்வாய்களும் உள்ளன. இவை அனைத்திலும் கழிவுநீரே ஓடிக் கொண்டிருக்கின்றன. சென்னையில் 320 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீர்வழிப் பாதைகளும், ஆயிரத்து 800 கிலோ மீட்டர் தொலைவுக்கு மழைநீர் வடிகால் கால்வாய்களும் உள்ளன.
வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாய்களில் மழைக்காலத்தில் தண்ணீர் ஓட வேண்டும். மற்ற காலங்களில் தண்ணீர் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால், சென்னையில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களில் ஆண்டுமுழுவதும் தண்ணீர் இருப்பது கொசு உற்பத்திக்கு முக்கிய காரணமாகும். அதனால்தான் வருடம் முழுவதும் சென்னைவாசிகளை கொசுக்கள் பதம்பார்த்து வருகின்றன. இதனால் வீடுதோறும் யாராவது ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார். கொசுவத்திச் சுருள், சதுர வடிவிலான மேட், குட்நைட் திரவம் போன்றவற்றுக்கு முன்பு கட்டுப்பட்ட கொசுக்கள் இப்போது அவற்றையும் சட்டை செய்யாமல் மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த மக்களுக்கு நொச்சிச் செடி வழங்கும் திட்டம் இப்போது நடைமுறை யில் இல்லை. ஆற்றோரங்களில் உள்ள மக்களுக்கு கொசுவலை வழங்கும் திட்டமும் கைவிடப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. மக்களுக்கு தீராத தலைவலியாக மாறியிருக்கும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க பல வழிகளில் முயற்சி செய்தும் தோல்வியே மிஞ்சியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அடிக்கடி மழை பெய்து வருவதால் சமீபத்தில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. பொதுவாக கனமழை பெய்தால் லார்வாக்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும். அந்த அளவு கனமழை இதுவரை பெய்யவில்லை. கொசு ஒழிப்புப் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். மழைநீர் வடிகால் கால்வாயில் மூடியைத் திறந்து கொசு மருந்து தெளிக்கிறோம். நீர்வழிப் பாதைகளிலும், திறந்தவெளிகளிலும் கொசு மருந்து அடிக்கப்படுகிறது.
அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடல் அலைகள் உயரமாக எழும். அப்போது கூவம், அடையாறு ஆகிய ஆறுகளின் முகத்துவாரங்களில் மணல்மேடு ஏற்படும். அதனால், சென்னைக் கழிவுநீரை கடலுக்குள் உள்வாங்கும் நிகழ்வு தடைபடும். கூவம் ஆற்றின் முகத்துவாரமான நேப்பியார் பாலம் அருகே பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல்மேடு அகற்றப்பட்டு பள்ளம் ஏற்படுத்தப்படும். அதுபோல அடையாறு முகத்துவாரமான பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்திலும் மணல்மேடு அகற்றப்படும். இப்பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடக்கவில்லை. இதுபற்றி பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது நிதி இல்லாததால் அப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றனர்.
அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கூவம் ஆற்றில் கடல்நீர் சூளைமேடு நமச்சிவாய நகர் வரை உட்புகும். அதுபோல அடையாறில் கடல்நீர் சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் வரை உட்புகும். அதன்பின்னர் அந்த தண்ணீர் முழுவதும் கடலுக்குள் செல்லும்போது லார்வாக்களும் அடித்துச் செல்லப்படும். இதனால் கொசு உற்பத்தி கணிசமாகக் குறையும். இந்த இயற்கை நிகழ்வுகள் அண்மையில் நடக்காததால், கொசு ஒழிப்புப் பணியில் 2 ஆயிரத்து 845 பேர் ஈடுபட்டுள்ள போதிலும் கொசுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கொசுத் தொல்லையில் இருந்து சென்னைவாசிகளைப் பாதுகாக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக கூவம், அடையாறு முகத்துவாரங்களில் மணல்மேட்டை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT