Published : 11 Jul 2014 12:31 PM
Last Updated : 11 Jul 2014 12:31 PM
அமைச்சர் வைத்திலிங்கம் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவைத் தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். தேமுதிக, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் வெள்ளிக் கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் திமுக, தேமுதிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று ஒரு பிரச்சினை குறித்து பேச வேண்டும் என்றனர். ‘ஒவ்வொருவராக பேசுங்கள்’ என்று பேரவைத் தலைவர் ப.தனபால் உத்தரவிட்டார்.
மோகன்ராஜ் (தேமுதிக): நாங்கள் நேற்று ஜனநாயக முறைப்படி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். வெளியே சென்ற எங்களைப் பார்த்து ‘ஓடுகாலிகள்’ என்று அமைச்சர் வைத்திலிங்கம் பேசியுள்ளார். இது முறையா? இந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
துரைமுருகன் (திமுக): ஜனநாயக முறைப்படி பேரவை யில் இருந்து கட்சியினர் வெளி நடப்பு செய்வது வழக்கமான நடை முறைதான். அவ்வாறு வெளிநடப்பு செய்த உறுப்பினர்களைப் பார்த்து ‘ஓடுகாலிகள்’ என்று அமைச்சர் கூறியுள்ளார். இது பேரவை மரபுக்கு ஏற்ற சொல் அல்ல. எனவே, அந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
அமைச்சர் பேசிய வார்த்தையை நீங்களாவது (பேரவைத் தலைவர்) அவைக் குறிப்பில் இருந்து நீக்கச் சொல்லியிருப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அந்தச் சொல் நீக்கப்படவில்லை. அதனால் அதுபற்றி பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. அதைப் படித்தவர்கள் சட்டப்பேரவையின் கண்ணியத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
அமைச்சர் வைத்திலிங்கம்: நான் நேற்று எதிர்க்கட்சியினரைப் பார்த்து, “மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து விரிவாகப் பதில் அளிக்கிறேன். அவையில் இருந்து அதைக் கேளுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தேன். “எனது பதிலில் உங்களுக்கு திருப்தி இல்லையென்றால் கேள்வி கேளுங்கள்” என்றேன். ஆனால், நீங்கள் அவையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதுடன், திட்டமிட்டு வெளிநடப்பும் செய்தீர்கள். அதனால்தான் ‘ஓடுகாலிகள்’ என்று சொன்னேன். நான் அப்படிப் பேசியதில் தவறில்லை.
(அதைக் கேட்டதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.)
பேரவைத் தலைவர் தனபால்: அமைச்சர் பேசியது சபையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தை இல்லை. இதற்கு முன்னுதாரணம் உள்ளது.
(அதையடுத்து திமுக உறுப்பினர்கள் பேரவைத் தலைவர் இருக்கை அருகே சென்று அவரை முற்றுகையிட்டு நேரடி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தேமுதிக உறுப்பினர்கள் பேரவை யில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆனால், திமுக உறுப்பி னர்கள் பேரவைத் தலைவரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் பேரவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.)
பேரவைத் தலைவர்: உங்கள் இடத்தில் போய் உட்காருங்கள். இந்த விஷயத்தை இதற்கு மேல் வற்புறுத்த வேண்டாம். அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். (ஆனால், திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.) பலமுறை எச்சரித்தும் அதைக் கேட்காமல் திமுக உறுப்பினர்கள் அவையை நடத்தவிடாமல் அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதால் அவர்களை வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு உத்தர விடுகிறேன்.
இவ்வாறு பேரவைத் தலைவர் கூறியதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.
புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டபோது முதல்வர் ஜெயல லிதா அவையில் அமர்ந்திருந்தார். ஆனால் எதுவும் பேசாமல் பேரவை நிகழ்ச்சிகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT