Published : 03 Mar 2023 04:17 AM
Last Updated : 03 Mar 2023 04:17 AM

ஈரோடு கிழக்கு: தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் அதிக வாக்குகளை ‘குவித்த’ அமைச்சர் யார்?

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிக வாக்குகளைப் பெற்று, முதல்வரின் பாராட்டைப் பெற அமைச்சர்களிடையே போட்டா போட்டி நிகழ்ந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் அதிக வாக்குகள் பெற்று அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் நேரு ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, 25-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கில் மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடிகள், எட்டு குழுக்களைச் சேர்ந்த அமைச்சர்களிடம் பிரித்து ஒப்படைக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாக்காளர்களை முழு நேரமாக ‘கவனித்து’ வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்து வாக்களிக்கும் வரை தீவிரமாக பணியாற்றினர்.

தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் கூடுதல் வாக்குகளைப் பெற்று, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நற்பெயரைப் பெற அமைச்சர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால், ஒவ்வொருவரும் தங்கள் முழு பலத்தையும் தேர்தல் பணியில் காட்டினர். இடைத் தேர்தல் முடிவில், அக்குழுவினரின் பணிக்கு கிடைத்த வாக்குகள் தெரியவந்துள்ளது.

அமைச்சர்கள் குழு: அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். சூரியம்பாளையம், வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள 31 வாக்குச்சாவடிகளில், இந்த குழுவினரின் தேர்தல் பணியால் 68.65 சதவீத வாக்குகள் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கிடைத்துள்ளன. அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழுவில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக நிர்வாகிகள் இடம் பெற்று இருந்தனர். இக்குழுவினருக்கு சூரம்பட்டி, பெரிய சேமூர் பகுதிகளில் உள்ள 39 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டன. இந்த வாக்குச்சாவடிகளில் 60.69 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

பெரியார் நகர் பகுதி: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் ரகுபதி, கீதாஜீவன், சிவசங்கர், மெய்யநாதன் இடம் பெற்று இருந்தனர். பெரியார் நகர் பகுதியில் 33 வாக்குச் சாவடிகளில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு 57.37 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் பெரிய கருப்பன், ராஜகண்ணப்பன் இடம் பெற்று இருந்தனர். கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள 21 வாக்குச்சாவடிகளில் இவர்கள் பணியாற்றிய நிலையில், 58.75 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளனர். அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், ராமச்சந்திரன் இடம் பெற்று இருந்தனர். கோட்டை பகுதியில் உள்ள 33 வாக்குச்சாவடிகளில் 61.35 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

அமைச்சர் சாமிநாதன் தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் காந்தி, மனோ தங்கராஜ் இடம்பெற்று இருந்தனர். கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள 23 வாக்குச்சாவடிகளில் இவர்களுக்கு 66.43 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் மதிவேந்தன் தலைமையிலான குழுவில், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் பகுதியில் 23 வாக்குச்சாவடிகளில் பணியாற்றினர். இக்குழுவுக்கு 68.86 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

அமைச்சர் செந்தில்பாலாஜி: அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையிலான குழுவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சி.வி.கணேசன் மற்றும் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் இடம் பெற்று இருந்தனர். இவர்களுக்கு வீரப்பன்சத்திரம் பகுதியில் ஒதுக்கப்பட்ட 35 வாக்குச் சாவடிகளில் 66.21 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அமைச்சர்களுக்கான தேர்தல் பணியில் அமைச்சர் சக்கரபாணி குழுவினர் 68.86 சதவீதமும், அமைச்சர் நேருவின் குழுவினர் 68.65 சதவீத வாக்குகளையும் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x