Published : 23 Sep 2017 06:57 PM
Last Updated : 23 Sep 2017 06:57 PM

சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதி மறுக்கவில்லை: டிடிவி.தினகரன் தரப்பு வழக்கறிஞர் பேட்டி

சபாநாயகர் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு, அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தரப்புக்கு பின்னடைவு என்பதெல்லாம் தவறாக பரப்பப்பட்ட பிரச்சாரம். உண்மை அதுவல்ல என்கிறார் தகுதி நீக்க வழக்கில் எம்.எல்.ஏக்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்.

வழக்கு விசாரணையின் போது சபாநாயகர் தரப்பில் தங்களது உத்தரவை தாங்களே நிறுத்தி வைப்பதாக வாக்குறுதி அளித்து தடை விதிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள் என்று கூறுகிறார், தினகரன் தரப்பு வழக்கறிஞர் ந.இராஜா செந்தூர் பாண்டியன். தி இந்து தமிழ் சார்பில் அவரிடம் பேசியபோது அவர் கூறியதாவது:

கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் நடவடிக்கை எடுத்ததை நீங்கள் எப்படி மறுக்கிறீர்கள்?

முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பது தான் இவர்கள் கடிதம், ஆகஸ்ட் 24 அன்று கொறடா சபாநாயகருக்கு கடிதம் தருகிறார், அன்றே எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி 30 ந்தேதிக்குள் பதில் கேட்கிறார்கள்.

30 ஆம் தேதி நாங்கள் பதில் கொடுக்கிறோம். கட்சிக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவில்லை. ஆட்சிக்கு எதிராகவும் எதுவும் செய்ய வில்லை என்று மனு அளித்து கால அவகாசம் கேட்கிறோம். அதற்கு 5 ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும், 7 ஆம் தேதி குறுக்கு விசாரணை என்று பதில் அளிக்கிறார்கள்.

5 ஆம் தேதி பதிலளிக்க கடிதம் தயார் செய்யும் நேரத்தில் 3 ஆம் தேதி எங்களுக்கு சபாநாயகர் ஒரு கடிதம் அனுப்புகிறார் அதில் முதலமைச்சர் 30 ஆம் தேதி கடிதம் கொடுத்துள்ளார், அதற்கு விளக்கம் கொடுங்கள் என்கிறார்.

கவர்னரிடம் 18 எம்.எல்.ஏக்கள் கொடுத்த கடிதம் முதல்வருக்கு எப்படி கிடைத்தது. அது சம்பந்தப்பட்ட விளக்கம் கேட்கிறோம். முதல்வரை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்கிறோம் ஆனால் அதை அவர்கள் கண்டுக் கொள்ளவே இல்லை.

சபாநாயகர் விளக்கம் கேட்கும்போது விளக்கம் அளிக்காமல் முதல்வர், கொறடாவை குறுக்கு விசாரணை செய்வோம் என்பது சரியா?

சபாநாயகர் விளக்கம் கேட்கிறார். எந்த டாக்குமெண்ட் அடிப்படையில் விளக்கம் கேட்கிறீர்களோ, அந்த டாக்குமெண்டை கொடுங்கள் என்று கேட்டால் நீங்கள் இறுதி அறிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள், அது எப்படி சரியாக இருக்கமுடியும். பாதிக்கப்பட்டவருக்கு உரிய ஆவணங்களை அளித்து விளக்கம் கேட்க வேண்டும் என்பது தானே இயற்கை நீதி.

சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கும் போது விளக்கம் கேட்கும் போது நேரில் வந்து விளக்கம் அளிக்கமாட்டோம் என்பது சரியா?

22 ஆம் தேதி சம்பவத்துக்கு சபாநாயகர் 24-ம் தேதி விளக்கம் கேட்கிறார் சரி, அதற்கு விளக்கம் அளிக்கும் போதே அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுக்கெல்லாம் பதில் சொல் என்பது சரியா.

இதே வானளாவிய அதிகாரம் இருக்கும் சபாநாயகரிடம் தான் ஓபிஎஸ் உள்ளிட்ட 10 பேர் எதிர்த்து வாக்களித்தது குறித்து மனு அளித்தோமே. அதில் அவரது வானளாவிய நடவடிக்கை என்ன இருந்தது.

சபாநாயகர் எடுக்கும் நடவடிக்கையில் குறை இருந்தால் கேட்கலாம் நீதிமன்றத்துக்கு போகலாம், இப்படித்தான் நீங்கள் நடக்க வேண்டும் என்று சபாநாயகரை கேட்க முடியாது என்கிறார்களே?

சபாநாயகரின் நடவடிக்கை குறித்து 15 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளது. சபாநாயகர் உள்நோக்கத்தோடு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் என்ன நடவடிக்கை என்பதை அந்த தீர்ப்பு சொல்கிறது. அதிகார துஷ்பிரயோகம் குறித்த தீர்ப்புகள் உள்ளது.

அதை இந்த கருத்தை சொல்பவர்களிடம் சொல்லுங்கள். சபாநாயகர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். சபாநாயகர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் முதல்வருக்கு ஆதரவாகத்தான் நடப்பார். இதே போன்ற வழக்குகளில் சபாநாயகர் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக அந்த தீர்ப்புகள் வந்துள்ளது.

சபாநாயகரின் அதிகாரத்தை பற்றி 10 வது ஷெட்யூலில் உள்ளதை மறுக்கிறீர்களா?

10 வது ஷெட்யூல் என்ன சொல்கிறது என்றால் ஒரு வழக்கில் தீர்ப்பு கொடுத்த பிறகு மறுபரிசீலனை செய்து தீர்ப்பு கொடுக்க நீதித்துறைக்கு உரிமை உள்ளது என்கிறது. சபாநாயகர் விசாரணையில் உள்ளவரை நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால் தீர்ப்பு கொடுத்த பிறகு அதை மறு பரிசீலனை செய்து தீர்ப்பளிக்க கோர்ட்டுக்கு உரிமை உள்ளது. உச்சநீதிமன்றம் தான் அனைத்துக்குமான அதிகாரம் பெற்றது. சீராய்வு மனு, மறு ஆய்வு மனுவுக்கு சட்டத்தில் இடம் உண்டு.

முதல்வரை குறுக்கு விசாரணை நடத்த கேட்கிறீர்களே?

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், தீர்ப்பாய நடைமுறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆவணங்கள் தொடர்பாக சொல்லும் போது அந்த ஆவணங்களை கேட்கவோ, சம்பந்தப்பட்டவரை குறுக்கு விசாரணை கேட்க உரிமை உள்ளது.

இதற்கு தமிழ்நாடு கட்சித்தாவல் தகுதியிழப்புச் சட்டத்தில் இடமிருக்கிறது. வானளாவிய அதிகார அடிப்படையில் கேட்ட ஆவணத்தை கொடுக்க முடியாது என்று கூற முடியாது. ஆனால் இவை எதையும் சபாநாயகர் மதிக்கவில்லை.

உயர்நீதிமன்றத்தில் கவர்னர் தரப்பில்அரசு வழக்கறிஞர்,  ” முதல்வரை மாற்றும் கோரிக்கை வைப்பது அவர்கள் உட்கட்சி விவகாரம், இதற்கு எங்களிடம் எதற்கு வரவேண்டும்” என்று சொன்னாரே?

அவரது வாதப்படி பார்த்தால் ஓபிஎஸ் அணியினர் சென்று மனு அளித்தார்களே. அன்று இதே ஆளுநர் பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று கேட்டாரே. இது ஊழல் ஆட்சி என்று சொன்ன ஓபிஎஸ்ஸை 15 நாளில் துணை முதல்வர் ஆக்கினார்களே. அப்படியானால் ஊழல் செய்வதை நிறுத்திக்கொள்வேன் என்று ஓபிஎஸ்ஸிடம் சொல்லி விட்டீர்களா? அல்லது ஓபிஎஸ் ஊழல் இல்லை என்று ஏற்றுக்கொண்டாரா? இதே வாதங்களை வைக்கும் 18 எம்.எல்.ஏக்கள் மீது மட்டும் எப்படி நடவடிக்கை எடுப்பீர்கள்.

இதைத்தான் உயர்நீதிமன்றத்தில் வாதமாக வைத்தீர்களா?

ஆமாம் மேற்கண்ட அம்சங்களைத்தான் துஷ்யந்த் தவே வாதமாக வைத்தார். கட்சிக்கு எதிராக ஒரு நபர் துரோகம் இழைத்தால் மட்டுமே கட்சித்தாவல் தடைச்சட்டம். ஆட்சிக்கு எதிராக புகார் அளித்தால் நடவடிக்கை என்றெல்லாம் சட்டம் இல்லை.

இன்னொன்று இவர்கள் அனைவராலும் தேர்வு செய்யப்பட்ட துணைப்பொதுச்செயலாளர் தினகரன். அவர் அந்த 18 எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு போட்டு கடிதம் கொடுக்க சொல்கிறார். கட்சித்தலைமை சொன்னதை ஏற்று கடிதம் கொடுத்த எம்.எல்.ஏக்கள் மீது எப்படி கட்சித்தாவல் தடைச்சட்டம் வரும்.

சபாநாயகர் இது போன்று நிறைய விதி மீறல்கள் செய்துள்ளார். அவர் ஆவணங்கள் அடிப்படையில் விளக்கம் கேட்பதும், அதற்கு விளக்கம் அளிக்க ஆவணம் கேட்டால் மறுக்கவும் செய்கிறார்.

சபாநாயகர் உத்தரவுக்கு நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டதே?

சபாநாயகர் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது என்பதே தவறான செய்தி. உங்கள் உத்தரவுக்கு நான் ஏன் தடை விதிக்க கூடாது என்றுதான் நீதிபதி கேட்டார்.

ஆனால் சபாநாயகர் தரப்புத்தான் இறங்கி வந்து நாங்கள் 18 எம்.எல்.ஏக்கள் தொகுதி காலி என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முடிவை தடுத்து நிறுத்துகிறோம். அந்த முடிவையே நிறுத்தி வைக்கிறோம், நீங்கள் தடை விதிக்க வேண்டாம் என்று கேட்டதே உண்மை அதை ஏற்று நீதிபதி வழக்கை அக்டோபர் 4-க்கு ஒத்திவைத்தார்.

நீதிபதி இறுதி விசாரணை அக்.4-க்கு எடுத்துக்கொள்கிறேன் என்கிறார். அதுவரை தடை விதிக்கிறேன் என்று நீதிபதி கூறும்போது, இவர்களே இறங்கி வந்து நாங்கள் எங்கள் உத்தரவை செயல்படுத்தாமல் தேர்தல் ஆணையத்தை பார்த்துக்கொள்கிறோம் தடை விதிக்க வேண்டாம் என்று கெஞ்சும் போது நீதிபதி ஏற்றுக்கொள்கிறார். இதை தடை விதிக்க மறுப்பு என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு ந. இராஜா செந்தூர் பாண்டியன் பேட்டியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x