Published : 02 Mar 2023 01:34 PM
Last Updated : 02 Mar 2023 01:34 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 7-ம் சுற்று முடிவில் இளங்கோவன் 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

கொண்டாட்டத்தில் திமுக தொண்டர்கள் | படம்: கோவர்தன்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் 7-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மார்ச் 2) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், தற்போது வரை 7 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 53,548 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 19,936 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 3,604 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 705 வாக்குகளும் பெற்றுள்ளனர். 7-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பெற்ற வாக்குகள்:

* திமுக கூட்டணி: 53,548
* அதிமுக கூட்டணி: 19,936
* நாம் தமிழர் கட்சி: 3,604
* தேமுதிக: 705

முதல்வர் ஸ்டாலின் கருத்து: “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி, திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி. எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். | விரிவாக வாசிக்க > மக்களவைத் தேர்தலுக்கு அச்சாரமே ஈரோடு கிழக்கு வெற்றி: முதல்வர் ஸ்டாலின் கருத்து

“பணநாயகம் வென்றது” - ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஜனநாயகத்திற்குப் பதிலாக, பணநாயகம் வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் தென்னரசு விமர்சித்துள்ளார். வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனநாயகத்திற்கு பதிலாக, பணநாயகம் வெற்றி பெற்று விட்டது என்று தெரிவித்துவிட்டு காரில் வேகமாக புறப்பட்டுச் சென்றார்.

இதனிடையே, கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், “ஈரோடு தேர்தல் முடிவு வந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் குறித்து தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். இந்த தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை. பணநாயக முறையில்தான் நடைபெற்றது” என்றார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மகிழ்ச்சி: “இந்த இடைத்தேர்தல் வெற்றி, முதல்வர் ஸ்டாலினையே சேரும். அவரது தலைமையிலான சட்டப்பேரவையில் பங்கேற்பது பெருமையாக உள்ளது” என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். அவர் பேட்டி முழுமையாக இங்கே > இந்த வெற்றி முதல்வரைச் சேரும் | ஸ்டாலின் தலைமையிலான சட்டப்பேரவையில் பங்கேற்பதில் பெருமை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

இதனிடையே, ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி முகம் கண்டுள்ளதால், அவருக்கு லட்டு வழங்கி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்கள், 25 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். இடைத்தேர்தலில், 82 ஆயிரத்து 138 ஆண் வாக்காளர்களும், 88 ஆயிரத்து 37 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 74.79.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x