Published : 02 Mar 2023 03:48 AM
Last Updated : 02 Mar 2023 03:48 AM

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒன்றுசேர வேண்டும் - கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.படம்: ம.பிரபு

சென்னை: ‘‘வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து ஒன்றுசேர வேண்டும்’’ என்று, சென்னையில் நடந்த பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-வதுபிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை தெற்குமாவட்ட திமுக சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.

இதில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிஹார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் நிறைவாக, முதல்வர் ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தி பேசியதாவது: நான் தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல. எப்போதும் உங்களில் ஒருவன். இந்தியாவில் புதிய அரசியலுக்கான தொடக்க விழா மேடையாக என் பிறந்தநாள் அமைந்துள்ளது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில், யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைவிட யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதுதான் முக்கியம். ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தும் பாஜகவை அரசியல் ரீதியாக வீழ்த்த வேண்டும். இதை ஒற்றை இலக்காக திட்டமிட்டு நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.

மாநிலங்களுக்குள் உள்ள அரசியல் வேறுபாட்டை வைத்து, தேசிய அரசியலை தீர்மானித்தால் இழப்பு நமக்குதான். இதை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் சொல்கிறேன். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து, விட்டுக்கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்று சிலர் பேசுவதும் கரைசேராது. தேர்தலுக்கு பிறகு கூட்டணி என்பதும் சரிவராது.

ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து 4 ஆண்டுகளாக தமிழகத்தை கேவலப்படுத்துகிறது மத்திய பாஜக அரசு. மொத்தமாக ரூ.12 கோடி மட்டுமே ஒதுக்கியது 8 கோடி தமிழக மக்களை ஏமாற்றும் செயல். நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நாட்களை கடத்தி ஸ்டாலினை அவமானப்படுத்துவதாக நினைத்து, மக்களை அவமானப்படுத்துகின்றனர்.

பாஜக அல்லாத மாநிலங்களுக்கு முறையாக நிதி வழங்குவது இல்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுடன் பாஜக நிர்வாக யுத்தம் நடத்துகிறது. அவர்களோடு நாம் கொள்கை யுத்தம் நடத்துகிறோம். இந்த போருக்கு வியூகம் வகுக்கும் பாசறைக் கூட்டமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது.

பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற தகவலை டெல்லிக்கு எடுத்துச் செல்லுங்கள். இந்தியா முழுமைக்கும் எடுத்துச் சென்று வெற்றிக்கு அடித்தளமிடுங்கள். இப்போதே விதைப்போம். அடுத்த ஆண்டு அறுவடைக் காலமாக அமையட்டும்.

வரும் 2024 தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்காக திமுக தொண்டர்கள் இப்போதிருந்தே உழைக்க வேண்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே. இவ்வாறு முதல்வர் பேசினார்.

முன்னதாக, பொதுக்கூட்டத்துக்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகித்தார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வரவேற்புரை நிகழ்த்தினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், பெரிய கருப்பன், கீதாஜீவன், சி.வி.கணேசன்,மெய்யநாதன், அன்பில் மகேஸ் உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை துணை மேயர் மகேஷ்குமார், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், சென்னை மாநகராட்சி 14-வது மண்டலக் குழு தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன், தென்சென்னை மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகி ஸ்டெர்லிங் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x