Published : 02 Mar 2023 12:42 AM
Last Updated : 02 Mar 2023 12:42 AM

“சமூக நீதியைப் போதிக்கும் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்” - சென்னை நிகழ்வில் தேஜஸ்வி யாதவ் பேச்சு

சென்னை: வட இந்தியாவில் இருக்கும் கட்சிகள் தமிழகத்திடம் இருந்து சமூகநீதியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பீஹார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தாள்விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புதன்கிழமை (மார்ச் 1) நடந்தது. இந்தக் கூட்டத்தில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீஹார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீஹார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பேசியது, "தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் இன்றுதான் பிறந்தநாள். என் சார்பாகவும், எனது தந்தை லாலு பிரசாத் யாதவ் சார்பாகவும் ஸ்டாலினுக்கு பிறந்தாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இயக்கத்திலிருந்து நாம் வந்துள்ளோம். தமிழகத்தில் திமுக பொருளாதார, வேலைவாய்ப்பை உருவாக்க முக்கியத்துவம் அளிப்பது போலப் பீகாரில் நாங்களும் அதை முன்னெடுத்துச் செல்கிறோம். நமது நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெற்று வருகிறது. இதை நாம் அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும்.

பாஜக ஆட்சியில் நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. வலுவான ஒரு மாற்றுச் சக்தியை உருவாக்க முதல்வர் ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. கடுமையான உழைப்பின் மூலம் ஆட்சியைப் பிடித்து, சமூகநீதியின் மேன்மைகளைப் பாதுகாக்கும் வகையிலான ஆட்சியை பெரியார், அண்ணா, கருணாநிதி வரிசையில் ஸ்டாலின் நடத்திவருகிறார். பாஜக அரசு சமூக நீதிக்கு எதிராகச் செயல்படுகிறது.

சமூக நீதியைப் போதிக்கும் தமிழ்நாட்டை பார்த்து மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். சோசலிசம் மற்றும் சமூக நீதி கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் சந்திக்கும் தளமாகத் தமிழ்நாடு மாறியுள்ளது. இங்கு பின்பற்றப்படும் சமூகநீதி கொள்கைகளை வட இந்தியாவில் இருக்கும் கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x