Published : 01 Mar 2023 08:23 PM
Last Updated : 01 Mar 2023 08:23 PM

“நாட்டின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேணடும்” - ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் ஃபரூக் அப்துல்லா அழைப்பு

சென்னையில் நடந்த முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா

சென்னை: "இந்த மேடையில் இல்லாத தலைவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது விழித்துக் கொள்ளுங்கள். அனைத்து மக்களும் மரியாதை, மாண்பு, அமைதியுடன் வாழும் நாட்டை கட்டமைக்க நாம் ஒன்றிணைய வேண்டும்" என்று காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தாள்விழா பொதுக் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புதன்கிழமை (மார்ச் 1) நடந்தது. இந்தக் கூட்டத்தில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிஹார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா பேசியது: "தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். நீங்கள் தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்காகவும் பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். முதல்வர் ஸ்டாலின் குறித்த குறும்படம் காட்டப்பட்டது. அதில் பல்வேறு பணிகளை செய்துள்ளார். இன்னும் பல பணிகளை அவர் செய்ய இருக்கிறார். இந்தியா ஒரு கடினமான சூழலில் இருந்து வருகிறது. இதை யாரும் மறக்கவில்லை. ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டும்.

தமிழகத்துக்கும் காஷ்மீருக்கும் எது பொதுவானது? ஸ்ரீநகரின் வெப்பநிலை இன்று 5 டிகிரி, தமிழ்நாட்டின் வெப்பநிலை 32 டிகிரி. இரு மாநிலங்களுக்கும் உண்ணும் உணவில் வேறுபாடுகள் உள்ளன. நீங்கள் பேசும் மொழியை என்னால் புரிந்துகொள்ள முடியாது. நான் பேசுகிற மொழியை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. அப்படியிருக்கும்போது எது நமக்கு பொதுவானதாக இருக்கிறது? நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அது.

தமிழ்நாட்டில் மட்டும் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் அவரது தந்தையைப் போலவே எல்லாத் தளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருடைய தந்தையை நானும் எனது தந்தையும் நன்கு அறிவோம். ஆனால், இன்னும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்த நாட்டிலும்தான். நான் அவரிடம் கேட்டுக்கொள்வதெல்லாம், இங்கிருந்து கொண்டே இந்தியா குறித்து சிந்திக்க வேண்டும் என்றுதான். அனைத்து மாநிலங்களும் எப்படி ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களும், நாட்டின் ஒருபகுதி என்பதை உணரவேண்டும். நாம் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், சீக்கியர் என யாராக இருந்தாலும் நாம் அனைவரும் இந்த தேசத்தைச் சேர்ந்த இந்தியர்கள். நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதைத்தான், நான் அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். இது வேண்டுகோள் அல்ல, என்னுடைய நிர்பந்தம்.

இந்த மேடையில் இல்லாத தலைவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது விழித்துக்கொள்ளுங்கள். அனைத்து மக்களும் மரியாதை, மாண்பு, அமைதியுடன் வாழும் நாட்டை கட்டமைக்க நாம் ஒன்றிணைய வேண்டும். இந்த நிலை வந்தால்தான் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். நாட்டில் மக்கள் பசியுடனும், வேலையில்லாமலும், விலைவாசி உயர்வாலும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த நாட்டை வலிமைபெறச் செய்ய முடியாது. ராணுவம், கப்பல் படை, விமானப்படையால் ஆனாது அல்ல இந்த தேசம். அது இந்திய மக்களால் ஆனது. இந்தியாவில் வாழும் இந்திய மக்களால்தான் நாட்டை வலிமைப்படுத்த முடியும்.

எனவே, அனைவரும் ஒன்றிணைந்து மாற்றுக்கருத்து இருந்தாலும், அதனை ஒதுக்கிவிட்டு நல்லிணக்கத்துடன் செயல்படவேண்டும். நிச்சயம் ஒருநாள் இந்தநிலை மாறும். நம்பிக்கையை இழக்க வேண்டாம். தமிழ்நாட்டை கட்டமைத்தது போல இந்தியாவையும் கட்டமைக்க ஸ்டாலின் முன்வரவேண்டும்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x