Last Updated : 01 Mar, 2023 01:50 PM

 

Published : 01 Mar 2023 01:50 PM
Last Updated : 01 Mar 2023 01:50 PM

சேலம் மாவட்டத்தில் 149 குழுக்கள் மூலம்  6 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி

கோமாரி நோய் தடுப்பூசி போடும் நிகழ்வை ஆட்சியர் தொடங்கி வைத்த காட்சி

சேலம்: சேலம் மாவட்டத்தில் 149 குழுக்கள் மூலம் 6 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம், கொண்டநாயக்கன்பட்டி சத்யா நகர், முனியப்பன் கோவில் பகுதியில் கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் அனைத்து கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து ஆட்சியர் கார்மேகம் கூறியது: “சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் சார்பில் நேற்று முதல் வரும் 21-ம் தேதி வரை அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக கோமாரி நோய்க்கான 3-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கோமாரி நோயானது இரட்டைக் குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுத்தும் ஓர் நச்சுயிரி தொற்று நோய் ஆகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர் மற்றும் பண்ணைக்கழிவுகள் மூலம் இந்நோய் மற்ற கால்நடைகளுக்கு எளிதில் பரவுகிறது.

கோமாரி நோயினால் மாடுகளில் சினைபிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குறைதல், தோல் மற்றும் தோல் பொருட்களின் மதிப்பு இறக்கம், எருதுகளின் வேலைத்திறன் பாதிப்பு மற்றும் கன்றுகளில் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு கால்நடை வளர்ப்போருக்கு பெரும் இழப்பு நேரிடுகிறது. இக்கொடிய நோயை தடுக்கும் பொருட்டு கால் மற்றும் வாய் நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாட்டினம் மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

இதன்படி, சேலம் மாவட்டத்தில் 149 குழுக்கள் மூலம் நான்கு மாத வயதுக்கு மேற்பட்ட சுமார் 6 லட்சம் பசு மற்றும் எருமைகளுக்கு அந்தந்த ஊராட்சியில் உள்ள கால்நடை மருந்தக பகுதிகளில் 3-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு பயன்பெறலாம்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x