கோப்புப்படம்
கோப்புப்படம்

“சிலிண்டருக்கு ரூ.100 மானியம்... திமுகவுக்கு தேர்தல் வாக்குறுதி நினைவிருக்கிறதா?” - தினகரன் கேள்வி

Published on

சென்னை: சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவார்களா? தேர்தல் அறிக்கையில் அப்படி ஒரு வாக்குறுதி கொடுத்தது திமுகவுக்கு நினைவிருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு மேலும் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. ஏற்கெனவே, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் சுமையாக இருக்கும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்விலிருந்து அவர்களைக் காப்பாற்றும் விதமாக திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவார்களா? தேர்தல் அறிக்கையில் அப்படி ஒரு வாக்குறுதி கொடுத்தது திமுகவுக்கு நினைவிருக்கிறதா?" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் மார்ச் 1 ஆம் தேதியான இன்று வீட்டு உபயோக சிலிண்டர், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இனி சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1118.50 காசுகள். அதேபோல் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.350.50 உயர்ந்துள்ளது. ஆட்டோக்களுக்கான எல்பிஜி விலையும் ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in