Published : 03 Sep 2017 12:49 PM
Last Updated : 03 Sep 2017 12:49 PM

நவராத்திரியை அலங்கரிக்க இருக்கும் புதுவகை கொலு பொம்மைகள்

ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இது, நவராத்திரி, தசரா, துர்கா பூஜை என ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, விழா நடக்கும் 9 நாட்களிலும் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப் படுகிறது.

நவராத்திரியின்போது பெண் கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நவராத்திரியின் முக்கிய அம்சம் கொலு வைப்பதாகும். பல படிகளை கொண்ட மேடையில், பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைக்கப்படும். தற்போதெல்லாம் அனைத்துத் தரப்பினரும் கொலு வைக்கிறார்கள். 3 முதல் 9 படிகள் என அவரவர் வசதிக்கு ஏற்ப படி அமைத்து, கொலு பொம்மைகளை அலங்கரிப்பார்கள்.

மண்பாண்டங்களை உருவாக்கும் கைவினைத் தொழிலாளர்கள், கொலு பொம்மைகளையும் உருவாக்குகிறார்கள். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் தவிக்கும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு கொலு பொம்மைகள் தயாரிப்பு பொருளாதார ரீதியில் பயனளிப்பதாக உள்ளது.

இது குறித்து கொலு பொம்மைகள் தயாரிக்கும் சக்திவேல் முருகன் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘மண்பாண்டம், சிலைகள் செய்வோர், மண்ணாலான கொலு பொம்மைகளும் செய்கின்றனர். எங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் கொலு பொம்மைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நவராத்திரியின்போது 10 நாட்களுக்கு அமைக்கப்படும் கொலுவுக்காக ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான பொம்மைகளை தயாரித்து, பூம்புகார், காதி, சர்வோதய விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்’ என்றார்.

நடப்பாண்டு நவராத்திரி விழாவுக்கு சுமார் 20 நாட்கள் உள்ள நிலையில், தற்போதே கொலு பொம்மை விற்பனை தொடங்கியுள்ளது.

இது குறித்து கோவை வடக்கு சர்வோதய சங்கத்தின் காதி கிராமோத்யோக் பவன் விற்பனை நிலையக் கண்காணிப்பாளர் செல்வராஜ் கூறியதாவது: கிராமப்பகுதிகளைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்களின் மேம்பாட்டுக்கு கொலு பொம்மைகள் உற்பத்தி பெரிதும் உதவுகின்றன. மண் எடுப்பவர்கள், மோல்டு செய்வோர், வர்ணம் தீட்டுவோர் என பல்வேறு தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொலு பொம்மைகள் வரவழைக்கப்பட்டு, ரூ.250 முதல் ரூ.5 ஆயிரம் வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

வழக்கம்போல தசாவதாரம், திருமணம், அறுபடை வீடு, கிரிக்கெட், அஷ்டலஷ்மி, ஆண்டாள் திருமஞ்சனம், கச்சேரி, பொங்கல், கிருஷ்ண லீலா, கார்த்திகை பெண்கள், கள்ளழகர், மீனாட்சி கல்யாணம், சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி, விஸ்வரூபம், சீமந்தம் செட் பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என வகைவகையான கொலு பொம்மைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் புதிதாக மைசூர் தசரா செட், மாமல்லபுரம், பாக்சிங் விளையாட்டு, ஜோதிர்லிங்கம், தீபாவளி செட் பொம்மைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

மண்ணாலான சிலைகள் மட்டுமின்றி, சார்ட் பேப்பர், காகிதக் கூழ், ஃபைபர், பிளாஸ்ட் ஆஃப் பாரிஸ், டெரகோட்டா ஆகியவற்றிலும் செய்யப்பட்ட சிலைகள் உள்ளன.

முன்பெல்லாம் சாமி சிலைகள்தான் அதிகம் விற்பனையாகும். தற்போது, கிரிக்கெட், விவசாயம், கிராமிய பெண்கள், கிராமத் தொழில்கள், பாக்சிங் என பல்வேறு வகைகளில் கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. சுமார் 5 அங்குலம் முதல் 4 அடி வரையிலும் சிலைகள் தயாரிக்கப்பட்டு, கொலுவை அலங்கரிக்கின்றன. கோயில்கள், வீடுகளில் கொலு வைப்பதற்காக மட்டுமின்றி, பரிசுப் பொருளாக வழங்கும் இந்த பொம்மைகளை ஏராளமானோர் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x