Published : 01 Mar 2023 06:28 PM
Last Updated : 01 Mar 2023 06:28 PM

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாத்திட தகுந்த உத்தரவிடுக: முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை

கும்பகோணம்: கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாத்திட தகுந்த உத்தரவுகள் வழங்கிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்ரேஷன் பாரதீய தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்ரேஷன் பாரதீய தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் டி.நாகராஜன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ”காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்யப்படாமல், ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் சுமார் 10,000 மூட்டைகள் இருப்பில் உள்ளன. இவ்வாறு இருப்பு இருப்பதால், இயற்கையாக ஏற்படும் இழப்பு நெல் கொள்முதல் பணியாளர்களின் தலையில் சுமத்தப்படுவதால், இயக்கம் செய்வதில் அதிகாரிகள் அலட்சியம் செய்வதாகத் தெரிய வருகிறது.

மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 48 மணி நேரத்திற்குள் இயக்கம் செய்யப்பட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளும் சமீபகாலமாகப் பின்பற்றப்படாமல் உள்ளனர். மேலும், நேற்று முன் தினம் பெய்த மழையில் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பல லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியங்களை வீணடிப்பதும், தேச விரோத செயலாகக் கருதப்படுகிறது.

இவ்வாறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட தரமான நெல்லை, உடனுக்குடன் இயக்கம் செய்து உரிய முறையில் பாதுகாக்கப்படாத காரணத்தால்தான், நெல்லின் தரம் மாறி தரக்குறைவான அரிசி பொது விநியோகத் திட்டத்தில் வழங்குவதன் மூலம் அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது.

எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் இயக்கம் செய்து, திறந்தவெளி சேமிப்பு மையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைத்து, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாத்திடத் தகுந்த உத்தரவுகள் வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x