Published : 01 Mar 2023 07:54 AM
Last Updated : 01 Mar 2023 07:54 AM

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் தொடரும் பிரச்சினைகள்: தீர்வு காணாமலே அவகாசம் கிடையாது என அமைச்சர் கூறுவது நியாயமா?

மதுரை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் பல்வேறு பிரச்சினைகள் இன்னும் தொடர்கின்றன. ஆனால், அதனை ஆய்வு செய்து தீர்வு காணாமல், இனி கால அவகாசம் வழங்கப்படாது என மின்சாரத் துறை அமைச்சர் கூறுவது நியாயமா? என மின்நுகர்வோர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் முடிந்துவிட்டதாகவும், இனி நீட்டிக்கப்படாது எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கறாராக கூறியுள்ளார். இதுவரை 2.66 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் பெறும் வீடுகள், குடிசை வீடுகள், விவசாயம், விசைத்தறி மின் இணைப்புகளை சேர்த்து மொத்தம் 2 கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம் மின் நுகர்வோர் உள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர் கூறுவதுபோல் 2.66 கோடி பேர் ஆதார் இணைத்துவிட்டதாக கூறினால் மீதம் இருப்பவர்கள் மிக குறைவானவர்களே. அரசு எந்த செயல்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தும் போதும் அதில் குறிப்பிட்ட சிலர் தங்களை இணைத்துக் கொள்வதற்கு தாமதமாகும். அதனால், அமைச்சர் மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கான காலஅவகாசம் இனிமேல் நீட்டிக்கப்படமாட்டாது என்று எச்சரிக்கை விட வேண்டிய அவசியம் இல்லை.

பிரச்சினைக்கு தீர்வு: அப்படியிருந்தும் அவர், இப்படி காலக்கெடு நிர்ணயித்து இனி ஆதார் எண்ணை இணைக்க முடியாது என்று காட்டமாகவும், திட்டவட்டமாகவும் கூறுவதன் பின்னணியில் இன்னும் ஏராளமானோர் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அப்படி ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பவர்களின் பிரச்சினைகள்தான் என்ன எனக் கண்டறிந்து, அதை தீர்ப்பதற்கான காரணங்களை மின்வாரியம் ஆய்வு செய்யாமல், மின் இணைப்புடன் ஆதாரை இனிமேல் இணைக்க முடியாது என்று கூறுவது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மின் கட்டணத்தை செலுத்த முடியாது என்றும், இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்படலாம் என்றும், 100 யூனிட் மானியம் ரத்தாகும் எனவும் பல்வேறு தகவல்கள் பரவுகின்றன.

நுகர்வோர் வேதனை: இதுகுறித்து மின் நுகர்வோர் கூறியதாவது: தற்போது அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் இலவச மின்சாரமும், 100 யூனிட் மின்சாரமும் ரத்தாகிவிடுமோ? என்ற அச்சத்தில் பலர் உள்ளனர்.

ஏற்கெனவே காஸ் மானியம் முழுமையாக வழங்கப்படும் எனக் கூறிவிட்டு தற்போது ஏமாற்றி விட்டனர். தமிழக அரசு 100 யூனிட் மின்சார மானியம் ரத்து ஆகாது என உறுதியளித்த பிறகே மக்கள் ஆதாரை இணைக்க ஆர்வம் காட்டினர்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஒரே நேரத்தில் பலர் முயன்றதால் சர்வர் பிரச்சினை, ஆன்லைனில் ஆதார் நகலை பதிவேற்றுவதில் சிக்கல் போன்றவை ஏற்பட்டன. தற்போது ஆதார் எண்ணை இணைக்க இணையதள வசதி எளிமையாக்கப்பட்டுள்ளது.

ஆனால், வெளிநாட்டில் வசிப்பவர்கள் வீடுகளில் ஏராளமானார் இன்னும் தங்கள் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்கவில்லை. தாத்தா மற்றும் அப்பா பெயரில் மின் இணைப்பு இருந்து அவர்கள் இறந்துவிட்ட நிலையில் சொத்துகள் பிரிக்கப்படாத வீடுகளிலும், ஆதார் எண்ணை இணைப்பதில் வாரிசுகளிடையே பிரச்சினை நீடிக்கிறது.

அதுபோல், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளனர். அவர்கள் வீடுகளில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க அனுமதிப்பதில்லை. இதனால் எதிர்காலத்தில் வருமான வரி பிரச்சினை வரும் என அஞ்சுகின்றனர்.

மேலும், வாடகைக்கு குடியிருப்போர் ஆதார் எண்ணை இணைத்தால், வீட்டின் மின் இணைப்பு அவர்கள் பெயரில் மாறிவிடக் கூடும் என வீட்டு உரிமையாளர்கள் அவர்களை இணைக்க விடுவதில்லை. மின் ஊழியர்கள் ஆய்வுக்குச் சென்றாலும் இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. இந்நிலையில், அமைச்சர் அதிகாரமாக ஆதாரை இணைக்க அவகாசம் கிடையாது என கூறுவது எந்த விதத்தில் நியாயம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரி விளக்கம்: மின்வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: மாநகரங்களில் மட்டுமே ஆதார் இணைப்பதில் சில பிரச்சினைகள் உள்ளன. ஏனெனில் ஒரே நபர் ஏராளமான வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். அவர்களும்சொத்துப் பிரச்சனை இருப்பவர்களும் ஆதாரை இணைப்பதில் பிரச்சினை நீடிக்கிறது. மற்றபடி ஆதாரை இணைக்க தற்போது இணையதளம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பு என்பது ஒரு விவரம் மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x